search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பூஜை பொருட்களை தலையில் சுமந்து வந்த பக்தரை படத்தில் காணலாம்.
    X
    பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பூஜை பொருட்களை தலையில் சுமந்து வந்த பக்தரை படத்தில் காணலாம்.

    பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

    சத்தியமங்கலம் அருகே பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சத்தியமங்கலம் அருகே பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதற்காக பண்ணாரி அருகே உள்ள சிக்கரசம்பாளையம், மேல் சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாரை, தப்பட்டை முழங்க பூஜை பொருட்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் குண்டம் திருவிழா நடத்த பண்ணாரி அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனின் உத்தரவு கிடைத்ததை தொடர்ந்து பக்தர்கள் ‘அம்மா தாயே, பண்ணாரி தாயே’ என பக்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பண்ணாரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அம்மன் வீதி உலாவாக செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சருகு மாரியம்மன், பண்ணாரி அம்மன் ஆகியோர் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து தாரை, தப்பட்டை முழங்க கோவிலில் இருந்து அம்மன் சப்பரம் வீதி உலாவாக சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. இரவு அங்குள்ள மாரியம்மன் கோவிலில் சருகு மாரியம்மன், பண்ணாரி அம்மன் ஆகியோர் தங்க வைக்கப்பட்டனர். இன்று (புதன்கிழமை) காலை சிக்கரசம்பாளையத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

    பின்னர் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் சப்பரம் வீதி உலாவாக சென்று வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு பண்ணாரியை சென்றடைகிறது. அன்று இரவே கோவிலின் முன்பு குழிக்கம்பம் போடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    Next Story
    ×