search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.
    X
    பக்தர்கள் குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.

    ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் விழா

    ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவையொட்டி திரளான பக்தர்கள் தீ மிதித்தனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ஈரோடு பிரப்ரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும், அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் ஆண்டுதோறும் குண்டம் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 18-ந் தேதி இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து தினமும் கம்பத்திற்கு பெண்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட கரும்புகள் (விறகு) குண்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

    நேற்று அதிகாலையில் உற்சவ மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குண்டத்திற்கு முன்பு அழைத்து வரப்பட்டது. காலை 6 மணிஅளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் தலைமை பூசாரி கண்ணன், சின்ன மாரியம்மன் கோவில் தலைமை பூசாரி கார்த்திகேயன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் தலைமை பூசாரி உதயகுமார் ஆகியோர் தீ மிதித்தனர். இவர்களை தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினார்கள்.



    ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்-சிறுமிகள் என திரளான பக்தர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர்.

    பக்தர்கள் சிலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். மேலும் சில பக்தர்கள் கையில் அக்னிசட்டியை ஏந்தியபடி தீ மிதித்தனர். பக்தர்கள் குண்டம் இறங்கும்போது “ஓம் சக்தி, பரா சக்தி” என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். அனைத்து பக்தர்களும் தீ மிதித்த பிறகு பக்தர்கள் குண்டத்தின் மீது உப்பு, மிளகு தூவினர்.

    திருவிழாவையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றினார்கள். பெரிய மாரியம்மனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டதால் பிரப்ரோட்டில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

    இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு மலர்பல்லக்கில் பெரிய மாரியம்மன் எழுந்தருளி திருவீதிஉலா நடக்கிறது. வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மனின் திருவீதிஉலாவும், இரவு 10 மணிக்கு சின்ன மாரியம்மனின் திருவீதிஉலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு விழா வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. இதில் 3 கோவில்களிலும் பிடுங்கப்படும் கம்பங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆற்றில் விடப்படுகிறது. அப்போது பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள்.

    2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×