search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 48 நாள் மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜையையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.

    விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம் மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் சிறப்பு ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலை 2-வது கால யாக பூஜையுடன் மண்டல பூஜை நிறைவு விழா தொடங்கியது.

    விழாவில் 33 கலசங்கள், 108 வலம்புரி சங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உச்சிகால பூஜையின் போது அனைத்து பரிவார சன்னதிகளிலும் கும்பாபிஷேக கலசம் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அண்ணாமலையாருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.



    மாலை 6 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மண்டல பூஜை நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விடுமுறை தினம் மற்றும் மண்டல பூஜை நிறைவு விழா என்பதால் கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். மண்டல நிறைவு விழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோவிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×