search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறவைக்காவடியில் வந்த போது எடுத்த படம்.
    X
    பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறவைக்காவடியில் வந்த போது எடுத்த படம்.

    பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும்-அக்னிசட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் தீர்த்தக்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களின் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த கோவில்களில் கடந்த 18-ந் தேதி கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து தினமும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் நேற்று அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அப்போது பக்தர்கள் கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு சென்று புனித நீராடிவிட்டு அலகுகுத்தி கொண்டனர். முகத்தில் அலகுகுத்தியும், முதுகில் வாள் காவடி குத்தியும் ஏராளமானவர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும், சில பக்தர்கள் முதுகில் பறவை காவடி அலகு குத்திக்கொண்டு பெரிய கிரேன் வாகனத்தில் தொங்கியபடி கோவிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.

    இதேபோல் ஏராளமான பெண் பக்தர்கள் தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக நடந்து வந்தனர். பக்தர்கள் சிலர் காளி வேடம், அம்மன் வேடம் அணிந்தும் கலந்துகொண்டனர். பக்தர் ஒருவர் முதுகில் அலகு குத்தியபடி 20-க்கும் மேற்பட்ட இளநீரை ஒன்றாக கட்டிவைத்து காவிரிக்கரையில் இருந்து கோவில் வரை இழுத்து வந்தார்.


    காளி வேடம் அணிந்து வந்த பக்தர்கள்.

    காவிரி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலை நோக்கி அலகு குத்தியும், தீர்த்தக்குடம், அக்னிசட்டி ஏந்தியும் அணிஅணியாக ஊர்வலமாக வந்ததால் ஈரோடு மாநகரம் நேற்று விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

    பெரிய மாரியம்மனை தரிசனம் செய்தற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றினர்.

    திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், கம்பங்கூழ் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. கோவிலில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் பக்தர்கள் அன்னதானம் வழங்கினார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கோவிலில் கூட்டநெரிசல் அதிகமாக ஏற்பட்டது. மேலும், பக்தர்கள் ஊர்வலமாக வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோடு காந்திஜிரோடு, பிரப்ரோடு, நேதாஜிரோடு, ஆர்.கே.வி.ரோடு, கச்சேரிவீதி, காவிரிரோடு ஆகிய ரோடுகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த வழியாக பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
    Next Story
    ×