search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொன் மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்
    X

    பொன் மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்

    அட்சய திருதியை நாளில் சென்று, இறைவனை கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லியும், தீபம் ஏற்றியும் வழிபட்டு வந்தால், பக்தர்களின் வீட்டில் நிரந்தரமாக செல்வ வளம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
    கேரளாவின் காலடி என்னும் தலத்தில் சிவகுரு- ஆர்யாம்பாள் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி திருச்சூர் என்ற திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள, வடக்கு நாதரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அந்தத் தம்பதியருக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தையே ஆதிசங்கரர். இவர் சிறு வயதிலேயே குருகுலத்தில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

    அந்த காலத்தில் குருகுல வழக்கப்படி யாசகம் (பிச்சை) எடுத்துதான் உணவு உண்ண வேண்டும். அதன்படி ஆதிசங்கரர் யாசகத்திற்காக புறப்பட்டார். அவர் யாசித்த வீடு ஒரு ஏழையின் வீடு. அந்த வீட்டின் முன்பு நின்று, 'பவதி பிட்சாந்தேஹி' என்று மும்முறை குரல் கொடுத்தார்.

    வீட்டில் இருந்து வெளியே வந்த பெண், 'ஐயா! தங்களுக்கு உணவிட இந்த ஏழையின் வீட்டில் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு காய்ந்த நெல்லிக்கனி மட்டுமே உள்ளது. இந்தாருங்கள்' என்றாள். அதைப் பெற்றுக்கொண்ட ஆதிசங்கரர், 'ஏழ்மை நிலையிலும் கூட, தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தானமாக தந்துவிட்ட அந்தப் பெண்ணின் குணத்தை எண்ணி வியந்தார். அந்தப் பெண்ணின் ஏழ்மையை போக்க எண்ணிய ஆதிசங்கரர், அந்த வீட்டின் முன்பு நின்றபடி மகாலட்சுமியை நினைத்து மனமுருக வேண்டினார்.

    என்ன அதிசயம்! அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள், பொன் மழையாகப் பெய்தன. வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் குவிந்தன. சற்று முன்வரை பரம ஏழையாக இருந்த அந்தப் பெண், இப்போது மிகப்பெரும் செல்வந்தராக மாறினாள்.



    ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் ஏழ்மையை அகற்றிய தினம் 'அட்சய திருதியை' ஆகும். அவர் பாடிய பாடல் 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.

    கேரளாவின் காலடியில் உள்ள கிருஷ்ணர், காலடியப்பன் என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் உள்ள கண்ணன், ஒரு கையில் வெண்ணெய் ஏந்தியும், மறு கையை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையை 'கிருஷ்ண அம்பலம்' என்று அழைக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சிவன் சன்னிதியும், இடதுபுறம் சாரதாம்பிகை சன்னிதியும், சக்தி விநாயகர் சன்னிதியும் அமைந்துள்ளன.

    இந்தத் தலத்தில் ஒரு விளக்கு நிரந்தரமாக தொடர்ந்து எரிந்தபடி உள்ளது. இதனை கல்வி விளக்கு என்று அழைக்கிறார்கள். இது ஒரு அணையா தீபமாகும். அட்சய திருதியை அன்று, இந்த ஆலயத்தில் 32 நம்பூதிரிகள், ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தை, 1008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்கிறார்கள்.

    அப்போது தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. முன்னதாக பணம் செலுத்தி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை பிரசாதமாக வழங்கப்படு கிறது. இதனைப் பெற்று வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வறுமை, கடன், நோய் அகலும். செல்வ நிலை உயர்ந்து, பொன், ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

    கேரள மாநிலம் காலடியில் உள்ள இந்த கிருஷ்ணர் ஆலயத்திற்கு, அட்சய திருதியை நாளில் சென்று, இறைவனை கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லியும், தீபம் ஏற்றியும் வழிபட்டு வந்தால், பக்தர் களின் வீட்டில் நிரந்தரமாக செல்வ வளம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    நாகர்கோவிலில் இருந்து 305 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 185 கிலோமீட்டர் தூரத்திலும், கேரள மாநிலத்தில் காலடி திருத்தலம் அமைந்துள்ளது.
    Next Story
    ×