search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறிக்கோளை அடைய நம்பிக்கை அவசியம்
    X

    குறிக்கோளை அடைய நம்பிக்கை அவசியம்

    ஒரே குறிக்கோளுடனும், முடியும் என்ற நம்பிக்கையுடனும் அயராது முயற்சி செய்தால் குறிக்கோளை அடைய முடியும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    ஆதிசங்கரரின் சீடராக இருந்தவர் பத்மபாதர். இவர் சங்கரரிடம் சீடராக சேர்வதற்கு முன் நடந்த கதை இது. பத்மபாதர் எப்படியாவது விஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தை நேரில் கண்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். இதற்காக அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குச் சென்று தவம் இருக்கத் தொடங்கினார்.

    ஒரு நாள் அந்த வழியாக ஒரு வேடன் வந்தான். அவன் பத்மபாதரிடம், ‘ஐயா! எதற்காக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தபடி தூங்குகிறீர்கள். உங்களுக்கு வீடு, வாசல் எதுவும் இல்லையா?’ என்று கேட்டான்.

    தியானத்தில் இருந்து விழித்த பத்மபாதர், ‘மூடனே! நான் தியானத்தில் இருக்கிறேன்’ என்றார் சற்று கோபமாக.

    ‘எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க ஐயா. சரி எதற்காக கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள்’ என்றான் வேடன்.

    ‘நான் நரசிம்மத்தை எண்ணி தவம் இருக்கிறேன்.’- இது பத்மபாதரின் பதில்.

    ‘நரசிம்மம்மா!.. அப்படின்னா என்ன?’ வேடன் புரியாமல் கேள்வியை தொடர்ந்தான்.

    பத்மபாதரோ எரிச்சலுடன், ‘சிங்கமும், மனித உடலும் கொண்டது அது’ என்றார்.

    வேடனோ, ‘அப்படி ஒரு மிருகத்தை இதுவரை, இந்தக் காட்டில் நான் பார்த்ததே இல்லையே! சரி.. நீங்க எங்கிட்ட சொல்லிட்டீங்க இல்ல.. அது என் கண்ணில் படாமலேயா போய்விடும். இன்று சாயங்காலத்துக்குள் அதை எப்படியாவது பிடிச்சிட்டு வந்திடுறேன்’ என்றான் வெள்ளந்தியாக.

    வேடனின் அறியாமையை எண்ணி பரிதாபம் கொண்ட பத்மபாதர், ‘சரியான ஞான சூன்யம்’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டார். பின்னர் தன் குறிக்கோளை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார். ஆனால் அவரது மனம், இறை தரிசனம் கிடைக்குமா? கிடைக்காதா என அலைபாய்ந்தது.



    பத்மபாதரை பார்த்து விட்டு வந்ததில் இருந்து வேடனின் எண்ணம் எல்லாம், நரசிம்மத்தின் மீதே இருந்தது. அவன் காட்டின் பல பகுதிகளிலும் கடுமையாக அலைந்து திரிந்தான். மான், முயல், சிங்கம், புலி என வழக்கமாக பார்க்கும் மிருகங்களும், சில அரிய வகை உயிரினங்களும் கூட அவன் கண்ணில் பட்டன. ஆனால் நரசிம்மம் என்ற அந்த விலங்கை மட்டும் அவன் கண்ணில் படாததை எண்ணி மனம் கலங்கினான். பசியை நினைக்கவில்லை. தாகத்தை பொருட்படுத்தவில்லை. இடை விடாது காட்டில் அலைந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.

    மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. இப்போது வேடனின் மனம் பதறத் தொடங்கியது. ‘அந்த துறவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விடும் போலிருக்கிறதே. வாழ்க்கையில் இதுவரை வாக்கு தவறியது இல்லையே. வாக்கை காப்பாற்றாதவன், பூமியில் வாழ தகுதியில்லாதவன் ஆயிற்றே. என் குலதெய்வமே! முருகப்பெருமானே! அந்த மிருகத்தை என் கண்ணில் காட்டு..’ என்று மனமுருக வேண்டினான். அப்படி ஒரு மிருகம் இருந்தால் அல்லவா காட்டில் தென்படுவதற்கு..

    ‘மாலை முடியப்போகிறது. இதுவரை நரசிம்மம் கண்ணில்படவே இல்லை. இனியும் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்று எண்ணிய வேடன் உயரமான பாறை மீது ஏறி, குதித்து உயிர்விட தயாரானான்.

    அவனது வாக்கு தவறாமையையும், கடமை உணர்வையும் கண்டு வியந்த மகாவிஷ்ணு, நரசிம்ம வடிவில் அவன் முன்னால் வந்து நின்றார்.

    வேடனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ‘மாட்டிக்கிட்டியா..’ என்றபடி நரசிம்மத்தை காட்டுக் கொடிகளால் கட்டி, பத்மபாதர் தவம் செய்த இடத்திற்கு வந்தான்.

    ‘ஐயா! பாருங்கள். இது தானே நீங்க கேட்ட நரசிம்மம்?’ என்றான்.

    பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனிடம் கையில் இருந்து காட்டுக் கொடிகள்தான் தெரிந்தது.

    ‘அடேய் மடயா! அவர் இறைவன். என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறார். உன்னிடமா வந்து மாட்டுவார்’ என்று ஏளனமாக கூறி சிரித்தார்.

    அப்போது அவர் காதில் ஒரு குரல் கேட்டது. ‘பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனும், முடியும் என்ற நம்பிக்கையுடனும் அயராது அலைந்து திரிந்தான். என்னைக் காணாமலும், வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும் உயிர்விடவும் துணிந்தான். நீயோ நான் வருவேனா, மாட்டேனா என்று அலைபாயும் மனதுடன் தியானம் செய்தாய். உன் கண்ணுக்கு நான் தெரிவது கடினமே’ என்றவர் அங்கிருந்து மறைந்தார்.
    Next Story
    ×