search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குரு பக்தி எப்படி இருக்க வேண்டும்?
    X

    குரு பக்தி எப்படி இருக்க வேண்டும்?

    சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாற்றையும் அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    என்னிடம் நம்பிக்கை வைத்தவர்களை
    நான் கைவிடுவதில்லை.

    - சீரடி சாய்பாபா.


    வாழ்வில் ஒரே ஒரு முறை, உங்களை நீங்கள் சீரடி சாய்பாபாவிடம் முழு மனதுடன், முழுமையாக ஒப்படைத்துப் பாருங்கள், அதன்பிறகு நீங்கள் எப்போதுமே வாழ்வில் கவலைப்பட மாட்டீர்கள். ஏனெனில் சத்குருவைப் போல் மிக உன்னதமான குரு உலகில் வேறு யாருமே கிடையாது. அவரிடம் நட்போடு தோழமை கொள்வது என்பது மிக, மிக எளிதானது. அவருக்காக நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம். தூய்மையான உங்கள் மனதை அவரிடம் ஒப்படைத்தால் போதும்.

    சீரடி சாய்பாபாவை உளப்பூர்வமாக கண் கண்ட தெய்வமாக மட்டுமின்றி, ஆத்மார்த்தமான குருவாகவும் ஏற்றுக் கொண்டவர்கள், மிகவும் சுலபமாக முக்திப் பாதையை எட்டியுள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் பாபாவிடம் ஏதாவது ஒருவித எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வார்கள். கேட்டால்... பாபாவிடம் உரிமையுடன் இருப்பதாக சொல்வார்கள். அப்படி எந்திரத்தனமாக, அசட்டுத்தனமாக குருவை ஏற்கக் கூடாது. முழு மனதுடன் ஏற்க வேண்டும்.

    பாபாவை நினைக்கும் போதெல்லாம், ‘‘ஓம்சாய், ஸ்ரீசாய், ஜெய ஜெய சாய்’’ என்ற மூல மந்திரத்தையோ அல்லது ‘‘சச்சிதானந்த சத்குரு சாய் மகராஜ் கீ ஜெய்’’ என்றோ சொல்லிப் பாருங்கள், குருவிடம் உங்கள் மனம் பக்குவப்பட்டு விடும்.

    குரு பக்தியானது நாளுக்கு நாள் உங்களை மேம்படுத்தும். சரி... குரு பக்தி எப்படி இருக்க வேண்டும்?

    பாபா தம் வாழ் நாளில் பல தடவை, பல பக்தர்களிடம், அவர்களது குரு பக்தியை சோதித்துப் பார்த்துள்ளார். துவாரக மாயி மசூதியில் அடிக்கடி இந்த சோதனை நடைபெறும். அதன் மூலம் குரு மீதான பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை பாபா உணர்த்தி உள்ளார். சீரடியில் பிளேக் எனும் காலரா நோய் பரவி இருந்த சமயத்திலும் பாபா அத்தகைய ஒரு விளையாட்டை விளையாடினார். காலராவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக சீரடியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    வெளியூர்களில் இருந்து எந்த பொருட்களையும் சீரடிக்குள் எடுத்து வரக் கூடாது என்று அறிவித்திருந்தனர். குறிப்பாக ஆடு கொண்டு வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் யாரோ ஒருவர் ஒரு ஆட்டை எப்படியோ சீரடி ஊருக்குள் கொண்டு வந்து விட்டார். சற்று வயதான அந்த ஆட்டை மசூதிக்குள் கொண்டு வந்து பாபா அருகில் நிறுத்தினார்கள்.

    பாபா அந்த ஆட்டை பார்த்தார். பிறகு தன் அருகில் இருந்த பீர் முகம்மது, ஷாமா, தீட்சித் ஆகிய மூவரையும் மாறி, மாறி பார்த்தார். அவர்கள் மூவருமே பாபா மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள். அதிலும் பீர் முகம்மது எப்போதும் மற்றவர்களை விட பாபாவிடம் அதிக அன்புடன் காணப்படுவார். அதனால்தானோ என்னவோ, மசூதியில் பாபா எப்போதும் பீர் முகம்மதுவை தன் அருகிலேயே உட்கார வைத்திருப்பார்.

    ஷுக்காவை புகைக்கத் தொடங்கினால் பாபா தான் பயன்படுத்திய புகைக் குழாயை முதலில் பீர் முகம்மதுவுக்கே கொடுப்பார். அது போல தினமும் தனக்கு காணிக்கைப் பணத்தில் கணிசமான ரூபாயை கொடுத்து அனுப்புவார். இத்தகைய சிறப்புப் பெற்ற பீர் முகம்மது உண்மையிலேயே பாபா மீது குரு பக்தி கொண்டிருந்தாரா? தம் அருகில் நிற்கும் ஆட்டை வைத்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள பாபா முடிவு செய்தார்.

    அருகில் இருந்த பீர் முகம்மது விடம், ‘‘அரிவாளை எடுத்து வந்து இந்த ஆட்டை ஒரே வெட்டாக வெட்டிக் கொல்’’ என்றார் பாபா. இதையடுத்து மசூதியில் இருந்த அனைவரது பார்வையும் பீர் முகம்மது மீது திரும்பியது. பலரும் அவர் பாபா உத்தரவை ஏற்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பீர் முகம்மது மனம் மாறினார். இந்த ஆட்டையெல்லாம் என்னால் வெட்ட இயலாது என்று சொல்லி விட்டு, மசூதியில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தார்.

    அடுத்து பாபா, மெல்ல ஷாமா பக்கம் திரும்பினார். ‘‘ஷாமா நீங்களாவது இந்த ஆட்டை வெட்டுங்கள்’’ என்றார். உடனே ஷாமா சமையல் அறைக்குள் சென்றார். அங்கிருந்து பெரிய அரிவாளை எடுத்து வந்தார். ஆட்டின் அருகில் வந்ததும், அவருக்கும் ஆடு மீது இரக்கம் வந்து விட்டது. பாபா முன்பு அந்த அரிவாளை வைத்து விட்டார். பாவமாக இருக்கிறது... இந்த ஆட்டை என்னால் வெட்ட முடியாது என்றார்.



    பாபா புன்னகைத்தார். மற்றொரு பக்கம் திரும்பிப் பார்த்தார். அங்கு தீட்ஷித் நின்று கொண்டிருந்தார். அவர் பிராமணர். பூஜைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆச்சாரத்தை கண்டிப்புடன் கடைபிடிப்பவர். அதோடு ஆடு, கோழிகளை கண்டாலே முகம் சுளிப்பவர். பாபாவுக்கும், அது நன்கு தெரியும். என்றாலும் அவர், “தீட்ஷித், நீங்களாவது இந்த ஆட்டை வெட்டுங்கள்” என்றார். மசூதியில் இருந்தவர்கள், தீட்ஷித்தும் ஓடி விடுவார் என்று நினைத்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
    பாபா முன் இருந்த பெரிய அரிவாளை தீட்ஷித் கையில் எடுத்தார். ஆட்டின் அருகில் சென்றார். ஆட்டின் கழுத்துப் பகுதியில் பார்வையை செலுத்தி குறி பார்த்தார்.

    பிறகு ஆட்டை வெட்டுவதற்காக அரிவாளை ஓங்கினார். ஓரக்கண்ணால் பாபாவைப் பார்த்தார்.“ம்ம்... வெட்டு” என்றார் பாபா. அடுத்த வினாடி தீட்ஷித் ஆட்டை வெட்ட கையை கீழே இறக்கினார். அப்போது பாபா உரத்தக் குரலில், ‘நிறுத்து’ என்றார். தீட்ஷித்தும் அரிவாளை ஓங்கியபடி அப்படியே நின்று விட்டார். ஆட்டை வெட்டவில்லை.

    அவர் குழப்பத்துடன் சாய்பாபாவை பார்த்தார். “ஏன் பாபா தடுத்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பாபா, “நீ ஒரு பிராமணன். என்றாலும் ஆட்டின் உயிரைப் பறிக்க அரிவாளை ஓங்கி விட்டாயே? என்றார். உடனே தீட்ஷித், “நான் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்பது முக்கியமல்ல, எனக்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதே முக்கியம். உங்களை நான் கண்கண்ட தெய்வமாக வழிபடுகிறேன். உங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. எனக்கு எது நல்லது? எது கெட்டது? என்று உமக்குத்தான் தெரியும். உங்கள் உத்தரவே எனக்கு அமிர்தமாகும். அதை நான் எப்படி மீறுவேன்?” என்றார்.

    “சரி.... தீட்சித் இது பாவம் இல்லையா?” என்றார் பாபா. அதற்கு தீட்ஷித், “பாவ, புண்ணியத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை. உங்கள் உத்தரவுதான் எனக்கு சட்டம். அந்த சட்டத்தை நான் மீற மாட்டேன். அந்த சட்டத்தை நிறைவேற்றுவதுதானே என்னைப் போன்ற பக்தனின் கடமை. எனவேதான் நீங்கள் ஆட்டை வெட்ட சொன்னதும் அரிவாளை கையில் எடுத்தேன்” என்றார்.

    பாபா சிறிது நேரம் தீட்ஷித்தை உற்றுப் பார்த்தார். பிறகு அவரை கட்டிப்பிடித்துக் கொண்டார். “இதற்கு பெயர்தான் குருபக்தி” என்று பாராட்டினார். பிறகு அவர் மசூதியில் இருந்தவர்களிடம், என்னிடம் அதிக குருபக்தி கொண்டிருப்பவர் யார் என்பதை உணர்த்தவே நான் இந்த ஆட்டை வெட்ட சொன்னேன். குரு பக்தியில் சிறந்தவர் யார் என்பதை நீங்கள் பார்த்து விட்டீர்கள்.

    உண்மையில் இந்த ஆட்டை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இந்த மசூதிக்குள் வந்த உடனே அது இறக்கப் போகிறது என்பது எனக்குத்தெரியும். இன்னும் சில நிமிடங்களில் இந்த ஆடு இறந்து விடும்” என்றார். பாபா சொன்னபடியே அந்த ஆடு சில நிமிடங்களில் மயங்கி சுருண்டு விழுந்து இறந்தது. மசூதியில் இருந்தவர்கள் அதை அதிர்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் பார்த்தனர்.

    இத்தகைய விளையாட்டை பாபா அடிக்கடி தம் அருகில் இருப்பவர்களிடம் நடத்துவதுண்டு. தன் அருகில் நெருக்கமாக இருக்கும் சிலருக்கு பாபா பொன்னையும், பொருளையும் அள்ளி, அள்ளிக் கொடுப்பார். சிலருக்கு கொஞ்சமாக கொடுத்து விட்டு நிறுத்திக்கொள்வார். அவருக்குத் தெரியும்... யாருக்கு, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று!

    90 சதவீதம் பக்தர்கள் பாபாவிடம், சொத்து வேண்டும், சுகம் வேண்டும், பொண்டாட்டி வேண்டும், வேலை வேண்டும், பிள்ளை வேண்டும் என்றே கேட்டனர். அதையெல்லாம் கேட்டு, கேட்டு அவர் சலிப்படைந்தது உண்டு. என்னிடம் ஆத்ம ஞானம் எனும் பொக்கிஷம் உள்ளது. அது வேண்டுமா...? உங்களுக்குத் தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லுங்கள்’’ என்று பாபா தம்மை நாடி வந்தவர்களிடம் கூறினார். ஆனால் பலரும் அதை உணரவில்லை.

    இது பற்றி பாபா ஒரு தடவை கூறுகையில், “ நான் எல்லோருடைய இதயங்களிலும் இருக்கிறேன். உலகின் ஆதார சுருதியும், ஜெகன்மாதாவும் நானே. என்னை நம்பி, குருவாக ஏற்று உண்மையாக வழிபடுபவர்கள், ஒரு போதும் உலகியல் வாழ்வில் நாட்டம் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு நான் எப்போதும் மெய் உணர்வை கொடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

    பாபா தன் உடலை உதிர்த்து 100 ஆண்டுகள் ஆகி விட்டது. என்றாலும் தன்னை குருவாக ஏற்றுக்கொண்டவர்களை அவர் ஒரு போதும் கை விட்டதே இல்லை. இன்றும் லட்சக்கணக்கான சாய் பக்தர்களின் இதயங்களில் அவர் சச்சிதானந்த சத்குருவாக, கண்கண்ட தெய்வமாக வீற்றிருக்கிறார். இப்படி பாபாமீது அபரிமிதமான பற்றும் பாசமும் வைத்திருந்த பலர், அவரது சீடராக முயன்றனர். ஆனால் பாபா யாரையும் தம் சீடராக ஏற்கவில்லை. சீடராக ஆசைப்பட்ட ஒருவருக்கு பாபா சில சக்திகளை மட்டும் அளித்தார்.

    அது பற்றி அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×