search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கரும்பைத் தின்ற கல் யானை
    X

    கரும்பைத் தின்ற கல் யானை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், உள்ள கரும்பைத் தின்ற கல் யானை கதையை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    சிவபெருமான் தன்னுடைய திருவிளையாடல்கள் பெரும்பாலானவற்றை அருளிய இடம் மதுரையம்பதி. அவற்றுள் ஒன்றுதான், எல்லாம் வல்ல சித்தராக இறைவன் வடிவெடுத்து பாண்டிய மன்னனுக்கு அருள்புரிந்தது.

    அபிஷேக பாண்டியன் என்ற மன்னன் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அப்போது உலகை ஆளும் ஈசன், ‘எல்லாம் வல்ல சித்தர்’ என்ற பெயரில் சித்தர் வடிவம் கொண்டு மதுரையின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வந்தார். அப்போது அவர் செய்த சித்து வேலைகளைப் பார்த்து மதுரை மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் முடவனை நடக்க வைத்தார். வாய் பேச இயலாதவரை பேச வைத்தார். இரும்பை தங்கமாக்கினார். ஊசியை நிறுத்தி அதன் முனையின் மீது நின்று நடனம் புரிந்தார்.

    இதுபோன்ற செய்திகளை எல்லாம் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன், அந்த சித்தரை அரண்மனைக்கு அழைத்து வரும்படி தன் பணியாளர்களை அனுப்பிவைத்தான். ஆனால் அவர்களும் கூட, எல்லாம் வல்ல சித்தரின் சித்து வேலையைக் கண்டு மெய் மறந்து அங்கேயே நின்று விட்டனர். போனவர்களை காணவில்லையே என்று கவலையுற்ற மன்னன், அமைச்சர்களில் சிலரை அனுப்பிவைத்தார்.

    அமைச்சர்களும் சித்தரைப் போய் அழைத்தனர். ஆனால் சித்தரோ, ‘மன்னனைப் பார்ப்பதால் எனக்கென்ன பயன் ஏற்படப் போகிறது? வேண்டுமானால் அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பிவிட்டார்.

    இதையடுத்து அபிஷேக பாண்டியனே, சித்தரைப் பார்ப்பதற்காக புறப்பட்டான். இதையறிந்த சித்தர், மீனாட்சி அம்மனின் கோவிலுக்குள் சென்று வாயு மூலையில் யோக நிஷ்டையில் அமர்ந்து விட்டார். மன்னன் அந்த இடத்திற்கே வந்தான். யோக நிஷ்டையில் இருந்த சித்தரை, மன்னனின் பாதுகாவலர்கள் எழுப்ப முயன்றனர். ஆனால் அவர்கள் கைகள் தூக்கிய நிலையிலேயே நின்றுவிட்டது.



    இதைக் கண்ட மன்னன், ‘சித்தர் பெருமானே! இப்படி யோகநிலையில் அமர்ந்து கொண்டால் நான் என்ன செய்வது? உங்களுக்கு எதுவும் தேவையென்றால் கேளுங்கள். மேலும் நீங்கள் உண்மையிலேயே சித்தர்தான் என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?’ என்று கேட்டான்.

    சித்தர் உருவில் இருந்த சோமசுந்தரர் கண்விழித்து, ‘மன்னா! நான்தான் ஆதியும், அந்தமும் இல்லாதவன், எங்கும் சஞ்சரிப்பவன். மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி, அவர்களுக்கு வேண்டிய வரத்தை கொடுத்தவன். என் பெயர் எல்லாம் வல்ல சித்தர்’ என்றார்.

    மன்னனோ, ‘நீங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானையை தின்னச் செய்யுங்கள்’ என்றான்.

    மறுநொடியே கல் யானையின் தும்பிக்கை நீண்டு கரும்பை தின்றது. அத்துடன் மன்னனின் கழுத்தில் கிடந்த மாலையையும் பறித்தது. இதனால் பதறிப்போன காவலர்கள், சித்தரை தாக்க முயன்றனர். அப்போது அதே நிலையிலேயே அவர்கள் சிலையாக மாறிப்போயினர்.

    இதையடுத்து மன்னன், தன்னை மன்னித்தருள வேண்டும் என்று சித்தரிடம் வேண்டினான்.

    உடனே சித்தர், ‘நான் இங்கேயே இருந்து மக்களுக்கு தேவையானதை அருள்வேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்றார்.

    மன்னனுக்கு புத்திர பாக்கியம் இல்லாத கவலை இருந்தது. அதுபற்றி சித்தரிடம் வேண்டினான். அவரின் அருளால் மன்னனுக்கு விரைவிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகில் ‘எல்லாம் வல்ல சித்தர்’ சன்னிதி உள்ளது.
    Next Story
    ×