search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்க மூலஸ்தானம் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும், பூக்களுடன் உற்சவர் காட்சியளித்ததையும் படத்தில் காணலாம்.
    X
    தங்க மூலஸ்தானம் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும், பூக்களுடன் உற்சவர் காட்சியளித்ததையும் படத்தில் காணலாம்.

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தர்கள் கூடை, கூடையாக பூக்களை கொண்டு வந்து வழிபாடு செய்தனர்.
    திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவில் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. இங்கு வீற்றிருக்கும் வெக்காளியம்மன் வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை சீற்றங்களையும் தானே தாங்கி கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக நம்பப்படுகிறது. மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார்.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கோவில் நிர்வாகம் சார்பில் பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்டது.


    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி பக்தர்கள் பூத்தட்டுகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையரும், செயல் அதிகாரியுமான கோ. ஜெயப்பிரியா தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் கூடை கூடையாக மலர்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தி வழிபாடு செய்தனர்.

    வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் நிறைவு பெற்று 11 ஆண்டுகள் ஆவதையொட்டி நேற்று மதியம் அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். காலையில் தொடங்கிய பூச்சொரிதல் விழா இரவு வரை நடந்தது. திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஊர்வலமாக பூத்தட்டுக்களை எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
    Next Story
    ×