search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரோட்டம்
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரோட்டம்

    அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் வாசலில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த பெரிய தேர் 5 அடுக்குகளாக அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளித்தது. தேரை இழுத்து செல்லுவது போன்று, மரத்திலான 4 குதிரைகள் தேரின் முன் பகுதியில் இணைக்கப்பட்டிருந்தன.

    வண்ண மலர் தோரணங்களால் தேர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணிக்கு உற்சவர் சன்னதியிலிருந்து முருகன் தெய்வானையுடன் புறப்பட்டு, காவல் தெய்வமான கருப்பணசாமி சன்னதிக்கு வந்தார். அங்கு பூஜைகள் நடைபெற்ற பின்பு, பெரிய தேருக்கு சென்று எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளினார்.



    தொடர்ந்து பெரிய தேரின் முன்பு பூஜைகள் நடந்து, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாமிநாதன் தேரில் நின்று வெள்ளை (துண்டு) வீசியவுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்க, சரியாக 6.39 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. தேரின் முன்பாக கோவில் யானை தெய்வானையும், விநாயகரின் சிறிய தேரும் புறப்பட்டு சென்றன.

    சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் பெரிய தேர் ஆடி அசைந்து சென்றது, பக்தி பரவசத்துடன் கூடிய கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர் காலை 11.45 மணிக்கு நிலைக்கு வந்தது. திருவிழாவின் நிறைவு நாளான இன்று (18-ந்தேதி) தீர்த்த உற்சவம் நடக்கிறது.
    Next Story
    ×