search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாய்பாபா நடத்தி வைத்த திருமணம்
    X

    சாய்பாபா நடத்தி வைத்த திருமணம்

    சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாற்றையும் அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    சீரடியில் சாய்பாபாவின் மனம் கவர்ந்த பக்தர்கள் எத்தனையோ பேர் இருந்தனர். அவர்களில் ராவ்ஜிராவ் என்பவரும் ஒருவர்.

    இவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்து வந்த ராவ்ஜிராவ், சீரடி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தேவிதாஸ் என்பவரின் மகனை மணமகனாக தேர்வு செய்திருந்தார்.

    அந்த மணமகனும் சாய்பாபா மீது பக்தி கொண்டிருந்தான். அடிக்கடி சீரடி வந்து பாபாவிடம் ஆசி பெற்று செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தான். பாபாவின் அருளால் தனக்கு சீரடியிலேயே மணப்பெண் கிடைத்து விட்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

    ராவ்ஜிராவுக்கும், தனக்கு பாபா நல்ல மருமகனைத் தேடி தந்து விட்டதாக திருப்தி ஏற்பட்டிருந்தது. ஆனால் மணமகனின் தந்தை தேவிதாஸ் மட்டுமே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

    தேவிதாஸ் வித்தியாசமான குணம் கொண்டவராக இருந்தார். சரியான கஞ்சன். யாருக்கும் 10 பைசா கூட கொடுக்க மாட்டார். ஆனால் மற்றவர்களை வாட்டி வதைத்து பணம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்.

    பண வி‌ஷயத்தில் அவர் கறார் பேர்வழி. இப்படிப்பட்ட அவர் தனது மகன் திருமணத்தை முன்னிட்டு ராவ்ஜிராவிடம் இருந்து அதிகமான சீதனப்பொருட்கள், நகைகள் மற்றும் வரதட்சணையை பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

    அவர் ஏற்கனவே ராவ்ஜிராவிடம் நகை, ரொக்கம் பேசி முடித்திருந்தார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.

    திருமண நாளும் வந்து விட்டது. சீரடியில்உள்ள ராவ்ஜிராவின் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேள-தாளங்கள் முழங்கின.

    தேவிதாஸ் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் மாட்டு வண்டியில் வந்து இறங்கினார். ராவ்ஜிராவும் அவர் குடும்பத்தினரும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அடுத்தப்படியாக திருமணச் சடங்குகள் தொடங்கின.

    அப்போது தேவிதாஸ், ராவ்ஜிராவை அழைத்தார். “என் மகனுக்காக நீங்கள் ஏற்பாடு செய்துள்ள சீதனப் பொருட்கள், நகைகளை முதலில் பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் என் மகன் உங்கள் மகள் கழுத்தில் தாலிக் கட்டுவான்” என்றார்.

    உடனே ராவ்ஜிராவ் வீட்டின் ஒரு அறைக்கு தேவிதாசை அழைத்துச் சென்றார். அங்கு சீதனப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் தேவிதாஸ் முகம் மாறியது.

    கோபத்துடன் அவர், “என்ன ராவ்ஜிராவ்... இவ்வளவு குறைவாக சீதனப் பொருட்கள் தருகிறீர்கள். ஊரில் என் மதிப்பு, மரியாதை என்னாகும்? இதை நான் ஏற்க மாட்டேன்” என்றார்.

    அதற்கு ராவ்ஜிராவ், “நான் என் சக்திக்கு மீறி செலவழித்து இந்த சீதனப் பொருட்களை சேகரித்துள்ளேன். என்னால் இவ்வளவுதான் சீர்வரிசை செய்ய முடியும்” என்றார்.

    இதைக் கேட்டதும் தேவிதாஸ் ஆத்திரமானார். “இந்த கல்யாணம் நடக்காது” என்று அறிவித்த அவர் மகன் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார். திருமணம் நின்று போனது.

    ராவ்ஜிராவும் அவர் குடும்பத்தினரும் கண்ணீர் விட்டனர். திருமண வீடே சோகத்தில் மூழ்கியது. இந்த தகவல் மசூதியில் இருந்த சாய்பாபாவுக்கும் பக்தர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. அவரும் வருத்தப்பட்டார்.

    மற்றொருபுறம் அவருக்கு கோபமாகவும் வந்தது. தேவிதாசை நினைத்து அவர் முகம் சிவந்தது. ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

    அடுத்த வாரம்... தேவிதாசுக்கு ஏற்பட்ட நோய் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பக்கவாத நோயால் அவர் பாதிக்கப்பட்டார். நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    ஒரு பக்க கை-கால் இழுத்துக் கொண்ட நிலையில் அவருக்கு பல்வேறு மருத்துவங்கள் பார்த்தனர். ஆனால் தேவிதாஸ் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கருமியான அவர் தன் நோய்க்காக பணம் அதிகம் செலவாவதை நினைத்து வருத்தப்பட்டார்.

    சில நாட்களில்... தேவிதாசின் இடது கால் மேலும் வலுவிழந்தது. இதைக் கண்ட தேவிதாசின் மகன், “அப்பா... சீரடிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்து விட்டு வந்தால் உங்கள் உடல்நலம் விரைவில் குணமாகும்” என்றான்.

    தேவிதாசுக்கு சீரடி செல்ல விருப்பம் இல்லை. பாபா பற்றி அறிந்திருந்தாலும் ஏனோ அவர் பாபா மீது பக்தி செலுத்தாமல் இருந்தார்.

    என்றாலும் அவரது மகன் விடவில்லை. தந்தையை வற்புறுத்தி சீரடிக்கு செல்ல சம்மதிக்க வைத்தான். மறுநாளே அவன் தேவிதாசை மாட்டு வண்டியில் ஏற்றி சீரடிக்கு அழைத்துச் சென்றான்.

    சீரடியை அடைந்ததும், தந்தையை பிடித்தப்படி அவன் துவாரகமாயி மசூதிக்குள் காலடி எடுத்து வைத்தான். அடுத்த வினாடி உள்ளே இருந்து பாபாவின் கர்ஜிக்கும் குரல் வெளிப்பட்டது.

    “தேவிதாஸ்.... என்ன துணிச்சல் இருந்தால் நீ என்னைப் பார்க்க வருவாய். உன்னைப் போன்று கொடிய மனதுகாரர்களிடம் நான் பேசுவதே இல்லை. போய் விடு.... உள்ளே வராதே” என்று பாபாவின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

    தேவிதாஸ் அதிர்ச்சியில் உறைந்து போனார். “நமது பெயர் எப்படி இவருக்குத் தெரியும்?” என்று யோசித்தார். அவரையும் அறியாமல் அவர் கண்ணீர் விட்டார்.



    துவாரகமாயி மசூதியில் இருந்து கீழே இறங்கிய அவர் வெளியில் வந்து ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டார். அவரை அவரது மகன் சமரசம் செய்தான்.

    “கவலைப்படாதீர்கள் அப்பா.... நான் போய் பாபாவை பார்த்து வருகிறேன். அவர் உங்களுக்காக உதி தருவார். நிச்சயம் அது உங்களை குணப்படுத்தும்” என்றான். பிறகு மசூதி உள்ளே சென்று பாபாவை வணங்கினான்.

    அவனிடம் பாபா, “உன் தந்தை குணம் அரக்கத்தனமானது. அதனால்தான் நான் அப்படி நடந்து கொண்டேன். உனக்காகத்தான் நான் உதி தருகிறேன். அவர் குணம் அடைந்து விடுவார். அடுத்த வியாழக்கிழமை அழைத்து வா” என்று கூறி உதியை அள்ளிக் கொடுத்தார்.

    அதை பெற்று வந்த தேவிதாஸின் மகன், உதியை தன் தந்தை உடலில் பூசி விட்டான். என்ன ஆச்சரியம்....? மூன்றாம் நாளே தேவிதாஸ் உடலில் மாற்றங்கள் தெரிந்தது.

    நான்காவது நாள் அவர் வழக்கம் போல நடக்கத் தொடங்கி விட்டார். தேவிதாஸ் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் கிராமத்தில் இருந்தபடி சீரடி திசை நோக்கி கும்பிட்டனர்.

    உடல் நலம் பெற்றதும் தேவிதாஸ் மீண்டும் பழைய பாணியில் செயல்பட தொடங்கினார். பணம்.... பணம் என்று ஓடினார்.

    அவரது மகன், “அப்பா.... வியாழக்கிழமை பாபா வரச் சொன்னாரே, ஞாபகம் இல்லையா..... வாருங்கள் சீரடி போய் வரலாம்” என்றான்.

    தேவிதாஸ் தயங்கினார். ஆனால் மகன் விடவில்லை. வற்புறுத்தி அழைத்துச் சென்று விட்டான். அன்று வியாழக்கிழமை என்பதால் பாபாவுக்கு நடக்கும் ஆரத்தியையும், மசூதியில் இருந்து சாவடிக்கு நடக்கும் கண்கவர் ஊர்வலத்தையும் காண பக்தர்கள் நிறைய திரண்டிருந்தனர்.

    பாபா மசூதியில் இருந்து வெளியில் வந்ததும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலம் தொடங்கியது. தேவிதாஸ் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்.

    ஆனால் அவரது மகன் “சாய் மகராஜிக்கு ஜே....” என்று கோ‌ஷமிட்டப்படி எல்லா கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டான். பிறகு பாபாவிடம் ஆசி பெற்றான்.

    அப்போது பாபா அவனிடம் உதியை அள்ளிக் கொடுத்து, “என் தந்தையின் உடல் சரியாகி விட்டது. உள்ளம்தான் சரியாக வேண்டும். சீக்கிரமே மனதிலும் மாற்றம் வந்து விடும்” என்றார்.

    அவர் கொடுத்து அனுப்பிய உதியைப் பெற்றதும் தேவிதாஸ் மனம் குதூகலம் அடைந்தார். அதை அவர் தன் நெற்றியில் பூசியதில் இருந்து அற்புதங்கள் நடக்கத் தொடங்கின.

    தேவிதாசின் உள்ளம் சாய்பாபாவையே சுற்றி, சுற்றி வந்தது. “பாபா எவ்வளவு பெரிய கருணைக் கடலாக இருக்கிறார்” என்று கூறி வியந்தார். தன் வீட்டிலும், கடையிலும் பாபா படத்தை வாங்கி மாட்டினார். தினமும் அந்த படங்களுக்கு பூஜை போட்டார்.

    மிக குறுகிய காலத்தில் அவர் மனதிலும் மாற்றம் ஏற்பட்டது. எல்லோரிடமும் கனிவுடன் பேசினார். வேலையாட்களிடம் இரக்கம் காட்டினார்.

    பணம் மீது கொண்டிருந்த மோகம் அவரை விட்டு விலகியது. சொத்து, புகழ் உள்ளிட்ட எதுவும் நிரந்தரம் அல்ல என்பதை உணர்ந்தார். அவர் மனம் பக்குவப்பட்டு இலவம் பஞ்சு போல மாறி விட்டது.

    வியாபார பொருட்கள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்த தேவிதாஸ் தினமும் பாபாவுக்கு பூஜை நடத்துவதையே பாக்கிய மாகக் கருதினார். அவர் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவியது. மகனிடம் ஒப்படைத்த வியாபாரத்தில் பணம் இரட்டிப்பாகப் புரண்டது.

    ஒருநாள் தேவிதாஸ் தன்னிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி மகனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன், “அப்பா... இதை நடத்துவது எல்லாம் பாபாதான். ஒரு தடவை நாம் சீரடிக்கு சென்று அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு வரலாம்” என்றான்.

    தேவிதாஸ் சரி என்று சம்மதித்தார். மறுநாளே அவர்கள் சீரடி புறப்பட்டு விட்டனர்.

    துவாரகமாயி மசூதியை நெருங்கியதும் தேவிதாசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ராவ்ஜிராவ் நடந்து சென்று கொண்டிருந்தார். பாபாவை பார்க்கத்தான் அவரும் சென்று கொண்டிருக்கிறார் என்பதை தேவிதாஸ் புரிந்து கொண்டார்.

    மாட்டு வண்டியில் இருந்து இறங்கி ஓடிச்சென்று ராவ்ஜிராவ் கையைப் பிடித்துக் கொண்டார். கண்ணீர் மல்க அவர் ராவ்ஜியிடம் மன்னிப்புக் கோரினார்.

    அதற்கு ராவ்ஜி, “இன்று வரை நான் உங்களை என் சம்பந்தியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனவே என்னிடம் மன்னிப்பு கேட்காதீர்கள்” என்றார்.

    இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர். மனம் நெகிழ்ந்தனர். திருமணத்தை மீண்டும் நடத்த இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    பிறகு மசூதிக்குள் சென்றனர். தேவிதாசும், ராவ்ஜிராவும் சிரித்த முகத்துடன் ஒன்றாக சேர்ந்து வந்திருப்பதைப் பார்த்ததும் பாபாவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்களை இப்படி சேர்த்து வைத்ததே அவர் நடத்திய திருவிளையாடல்தான் என்று யாருக்குத் தெரியும். தனக்கு எந்த சீர் வரிசையும் வேண்டாம். சீரடியில் உள்ள அனைவருக்கும் சாப்பாடு போட்டால் போதும் என்று தேவிதாஸ் கூறினார். ராவ்ஜிராவ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நன்றியோடு அவர் பாபாவை பார்த்தார்.

    திருமண தேதி குறித்தனர். குறிப்பிட்ட நாளில் சீரடியில் தேவிதாஸ் மகனுக்கும் ராவ்ஜிராவ் மகளுக்கும் திருமணம் நடந்தது. சாய்பாபாவே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

    உண்மையிலேயே அந்த தம்பதி மிக, மிக கொடுத்து வைத்தவர்கள். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்?

    இப்படி பக்தர்களிடம் அற்புதங்கள் புரிந்த பாபா, தம் பக்தர்களை சோதனை செய்யவும் தவறியதில்லை. அதுபற்றி அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    Next Story
    ×