search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்த போது எடுத்த படம்.
    X
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்த போது எடுத்த படம்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா: நாளை தேரோட்டம் நடக்கிறது

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெரு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிபெருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை திருவிழா கடந்த 25-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து தினமும் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வெவ்வேறு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    5-வது நாள் விழாவான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு கோவிலில் இருந்து மேள, தாளம் முழங்க உற்சவ அம்மன் ஊர்வலமாக அக்னி குளத்திற்கு சென்றார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு எழுந்தருளினார்.


    விழாவில் அலகு குத்தி பறக்கும் காவடி எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பல பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், பறவை காவடி எடுத்தும் தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்பட பலர் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று(புதன்கிழமை) யானை வாகனத்தில் அங்காளம்மன் வீதியுலா காட்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதற்காக புதிய தேர் செய்யப்பட்டு, அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×