search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அந்தியூர் அருகே மகமேறு தேர் மற்றும் அங்காளம்மன் தேரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி வந்ததை படத்தில் காணலாம்.
    X
    அந்தியூர் அருகே மகமேறு தேர் மற்றும் அங்காளம்மன் தேரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி வந்ததை படத்தில் காணலாம்.

    அங்காளம்மன் கோவில் திருவிழா: 40 அடி உயர மகமேறு தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்

    சந்தியபாளையம் அங்காளம்மன் கோவில் திருவிழாவில் 40 அடி உயர மகமேறு தேரை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். 500 ஆடுகள் பலியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
    அந்தியூர் சந்தியபாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இதற்காக அதிகாலை 3.30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட 40 அடி உயர மகமேறு தேரில் நடராஜர் எழுந்தருளினார்.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க அங்காளம்மன் கோவிலில் இருந்து தேரை ஏராளமான பக்தர்கள் தோளில் சுமந்தபடி அருகில் உள்ள காவு திடலுக்கு கொண்டு சென்றனர். இதேபோல் சிறிய தேரில் சிவகாமி அம்மாள், அங்காளம்மன் எழுந்தருளினர். இந்த 2 தேர்களையும் பக்தர்கள் தோளில் சுமந்தபடி காவு திடலுக்கு கொண்டு சென்றனர். காவு திடலை சென்றடைந்ததும் அங்கு சாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    இதைத்தொடர்ந்து 4.30 மணி அளவில் ஆடு பலியிடும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காலை 7 மணி வரை தொடர்ந்து 2½ மணி நேரம் ஆடுகள் பலியிடப்பட்டன.

    பின்னர் 8 மணி அளவில் காவு திடலில் இருந்து மீண்டும் தேர்களை தோளில் சுமந்தபடி அங்காளம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். அப்போது தேர் செல்லும் வழியில் பெண்கள் தண்ணீர் ஊற்றி சாமிக்கு தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். கோவிலை சென்றடைந்ததும் சாமிக்கு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இதற்கிடையே பலியிடப்பட்ட ஆடுகள் அனைத்தும் அங்கிருந்து டிராக்டர் மூலம் கோவில் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கறி சமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமைக்கப்பட்ட கறி சாமிக்கு படைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

    பின்னர் மதியம் 3 மணி அளவில் பக்தர்கள் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் அந்தியூர், சந்தியபாளையம், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், சின்னதம்பிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாப்பிட்டனர். இந்த விருந்து இரவு 8 மணி வரை தொடர்ந்து நடந்தது. இன்று (புதன்கிழமை) காலை சாமி வீதி உலா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
    Next Story
    ×