search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விழாவில் பெண் பக்தர் ஒருவர் குண்டம் இறங்கியதை படத்தில் காணலாம்.
    X
    விழாவில் பெண் பக்தர் ஒருவர் குண்டம் இறங்கியதை படத்தில் காணலாம்.

    அங்காளம்மன் கோவில் திருவிழா: குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம்இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. அன்று இரவு கிராம சாந்தியும், 24-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றம், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 10 மணிக்கு முகப்பள்ளம், மயான பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம், மாலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி, பின்னர் அக்னி குண்டம் வளர்க்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

    பின்னர் 30 அடி நீளமுள்ள குண்டத்தில் கரும்பு, நவ தானியம், மரக்கட்டை போட்டு குண்டம் வளர்த்தனர். பின்பு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மகா சிவராத்திரி பூஜையும், திருக்கல்யாண உற்சவமும் கோவில் கல்யாண மண்டபத்தில் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பிரசாதமாக மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு அம்மன் அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முதலில் கோவில் பூசாரி குண்டம் இறங்கினார். அவரை பின் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சில பெண்கள் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கினார்கள். தொடர்ந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (திங்கட்கிழமை) காலை கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. குண்டம் திருவிழாவையொட்டி, இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய பாடல்கள் உள்பட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குண்டம் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×