search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிதிருவிழா தொடங்கியது

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் பெண்கள் இருமுடிகட்டுடன், வந்து ‘தேவி சரணம் தா’ என்ற கோஷத்துடன் அம்மனை வழிபடுவார்கள்.

    இந்த கோவிலில் மாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றன. பின்னர், மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாள த்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

    பிறகு கோவில் முன் உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட திருக்கொடி கொடிமரத்தில் கட்டப்பட்டது. பின்னர் அந்த கொடியை, இடைக்கோடு மகாதேவரு அய்யர் தந்திரி ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடி நின்ற பக்தர்கள் குலவையிட்டனர். பின்னர், தேங்காய், பழம், வெண்பொங்கல் வைத்து கொடிபூஜை, கற்பூர பூஜை நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்ட பா.ஜனதா தலைவர் முத்து கிருஷ்ணன், துணைத்தலைவர் குமரி பா.ரமேஷ், திருக்கோவில் இணை ஆணையர் பாரதி, பத்மநாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் அனந்தன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் என்ஜினீயர் அய்யப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி முருகேசன், மண்டைக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், கருணானந்த மகராஜ், ஸ்ரீதேவி கலாமன்ற தலைவர் செல்லத்துரை, செயலாளர் மோகன்தாஸ், சேவா சங்க தலைவர் கந்தப்பன், பொது செயலாளர் ரெத்தின பாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    திருவிழாவையொட்டி நடந்த சமய மாநாட்டில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்த காட்சி.

    தொடர்ந்து சமயமாநாடு பந்தலில் 80-வது சமய மாநாடு கொடியேற்றம் நடந்தது. திருச்சி ஸ்ரீ ராமகிருஷ்ண வேதாந்திர ஆசிரம சுவாமி சொரூபானந்தஜி மகராஜ் மாநாட்டை தொடங்கி வைத்து உரைஆற்றினார். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறேன். குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றுவேன். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு அனைவரின் பங்களிப்புடன் தங்கதேர் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் உள்பட பலர் பேசினர்.

    பின்னர் மதியம் உச்சகாலபூஜை, அன்னதானம் நடந்தது. மாலையில், ராஜ ராஜேஸ்வரி பூஜை, 9000 திருவிளக்கு பூஜை நடந்தன.

    வருகிற 3-ந் தேதி நள்ளிரவு வலியபடுக்கை பூஜையும், 6-ந் தேதி இரவு 10 மணிக்கு பெரிய சக்கர தீ வட்டி ஊர்வலமும், திருவிழாவின் நிறைவு நாளான 7-ந் தேதி ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி, கோவிலை சுற்றியும், கோவிலில் இருந்து புனித நீராட செல்கிற கடற்கரை பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×