search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நிறைவுபெற்றது
    X

    சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நிறைவுபெற்றது

    காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. அடிவாரத்தில் இருந்து சாமி மலைக்கு எழுந்தருளினார்.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 10-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை 3 நாட்கள் தேர் மலையை சுற்றி வந்து நிலையை அடைந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினசரி பல்வேறு சமூக மக்களின் மண்டப கட்டளைகள் நடைபெற்று வந்தது. கடந்த 15-ந்தேதி சாமி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து பல்லக்கில் பக்தர்களால் நந்தவன தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றி சாமி வலம் வந்தார். அதன் பின்னர் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமிக்கு வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு சப்பரத்தில் செண்டை மேளம் முழங்க வாத்தியங்களுடன் மலை அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சப்பரத்தை தாங்கி செல்ல படிகள் வழியாக சுப்பிரமணியசாமி திருமலைக்கு எழுந்தருளுளினார். அதன் பின்னர் சிவன்மலை கோவிலில் உள்ள கொடி கம்பத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டது. இத்துடன் இந்த ஆண்டின் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.
    Next Story
    ×