search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் நாச்சியார்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடங்குகிறது
    X

    உறையூர் நாச்சியார்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடங்குகிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடங்குகிறது. வருகிற 22-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை(வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது. நாளை தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 5 நாட்கள் பகல் பத்து உற்சவமும், 22-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை 5 நாட்கள் ராப்பத்து உற்சவமும் நடைபெற உள்ளது.

    பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திருமொழி பாசுரங்கள் மூலஸ்தானத்தில் சேவிக்கப்படும். 21-ந்தேதி முத்துக்குறி வைபவம் நடைபெறும். அப்போது முத்துக்குறி பாசுரத்திற்கான அபிநயம், வியாக்யானங்கள் அரையர்களால் சேவிக்கப்பட்டு இரவு 8.30 மணி அளவில் தீர்த்தம், ஸ்ரீ சடகோபம் சாதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தாயார் புறப்பாடு கிடையாது. மாலை 5 மணிக்கு மேல் மூலஸ்தான சேவையும் கிடையாது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் வருகிற 22-ந்தேதி(புதன்கிழமை) மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் உற்சவர் தாயார் மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 6 மணிக்கு சொர்க்கவாசலில் எழுந்தருள்கிறார். இரவு 7 மணிக்கு தாயார் வழிநடை உபயங்கள் கண்டருளி ஆழ்வார் ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபம் சேருகிறார். இரவு 8.45 மணிக்கு அலங்காரம் கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல 23 மற்றும் 24-ந்தேதிகளிலும் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி சொர்க்கவாசலை கடந்து செல்வார்.

    25-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு சொர்க்கவாசலை கடந்து செல்வார். இரவு 10.30 மணிக்கு மூலஸ் தானம் சென்றடைவார். 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூலஸ்தானத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப் பாடாகும் தாயார் மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இரவு 11.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். 27-ந்தேதி காலை 9.30 மணிக்கு இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெய ராமன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×