search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவை கோனியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    கோவை கோனியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கோவை கோனியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

    கோவை கோனியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. 2¼ மணிநேர வெள்ளோட்டத்துக்கு பின்னர் வெற்றிகரமாக தேர் நிலையை அடைந்தது.
    கோவை கோனியம்மன் கோவில் தேர் பழமையானதாக இருந்ததால், ரூ.21 லட்சம் செலவில் புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இழுப்ப மர கட்டைகள் மூலம் தேர் தயார் செய்யப்பட்டது. 16 அடி உயரத்துடனும், 41 அடி சுற்றளவுடனும் தேர் வடிவமைக்கப்பட்டு சிவன், விஷ்ணு சிற்பங்கள் தேரில் செதுக்கப் பட்டது.

    கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தேர் செய்யும் பணி முடிந்தது. இதை தொடர்ந்து தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ராஜவீதி தேர்நிலை திடலில் தேர் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஹோமம் வளர்க்கப்பட்டு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள்.

    பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கலசம் தேரில் வைக்கப்பட்டு தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி காலை 10.15 மணிக்கு தொடங்கியது. பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆகியோர் வடம் பிடித்து தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    தேர், ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக பகல் 12.30 மணிக்கு வெற்றிகரமாக நிலையை அடைந்தது. தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, கோனியம்மன் கோவில் செயல் அதிகாரி விமலா, போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியையொட்டி கோவை ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, டவுன்ஹால் உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வெள்ளோட்ட நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் மீண்டும் வழக்கம்போல் போக்குவரத்து சீரானது.

    தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி குறித்து கோவில் செயல் அதிகாரி விமலா கூறும்போது, ‘புதிய தேர் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. வழக்கமான பாதைகளில் 2¼ மணிநேரம் தேர் சரியான முறையில் சென்றது. இதைத்தொடர்ந்து கோனியம்மன் கோவில் தேரோட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி நடை பெறும்’ என்று கூறினார்.
    Next Story
    ×