search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
    X

    பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில், 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில், 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில், நேற்று இரவு ராக்கால பூஜைக்குபின் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜையும் நடந்தது. மேலும் பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறுகிற இத்திருவிழாவில் முதல் நாளான இன்று காலை 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாசனம், மயூரையாகம் நடைபெறுகிறது.

    அதன்பின்னர் கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும், முத்துக்குமார சுவாமி மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வனைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடத்தப்பட்டு கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மேல் காலசந்தி பூஜையில் காப்பு கட்டப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி கொடிப்படத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சிகாக கொடிக்கட்டு மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடை பெறும். கொடிக்கட்டு மண்டபத்தில் விநாயகர் பூஜை, கொடி பூஜை, வாத்திய பூஜை நடத்தப்பட்டு கொடிப்படத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றப்படுகிறது.

    அதன் பின்னர் கொடிமரத்திற்கு விசேஷபூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து கொடிக்கட்டும் மண்டபத்தில் கொடியேற்றத்தை காண சப்பரத்தில் எழுந்தருளி இருக்கும் முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானைக்கு தீபாராதனை நடத்தப்படுகிறது. அதன்பிறகு, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.

    மதியம் 12 மணிக்கு மேல் உச்சிகால பூஜையில் திருஆவினன் குடிகோவில், மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவாரபாலகர்களுக்கு காப்புகட்டப்படுகிறது. திருவிழாவையொட்டி 10 நாட்களிலும் தினமும் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேணு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம், மற்றும் தங்கக்குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவில் 6-ம் நாளான வருகிற 8-ந்தேதி இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி நான்கு ரதவீதிகளில் உலா வருதலும் நடைபெறுகிறது.

    விழாவின் 7-ம் நாளான வருகிற 9-ந்தேதி தைப்பூசம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் 10-ம் நாளான 12-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×