search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி கோவில் தைப்பூசத் திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது
    X

    பழனி கோவில் தைப்பூசத் திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது

    பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    முருகனின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டு தோறும் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாதையாத்திரைக்கு பிரசித்திப்பெற்ற இந்த திருவிழா வருகிற 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி வில்வனம் என்றும், ஊர்கோவில் என்றும் அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் வருகிற 2-ம் தேதி இரவு வாஸ்து சாந்தி பூஜை, ஆஸ்திரதேவர் உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான 3-ம் தேதி அதிகாலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாண மண்டபத்தில் 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

    பின்னர் காலை 9.30 மணிக்கு கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று இரவு 7.30 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருஉலா காட்சி நடைபெறுகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினசரி காலை 8.45 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் திருஉலா காட்சி நடைபெறும். தினசரி இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை, பெரிய தங்கமயில் வாகனம் ஆகியவற்றில் சுவாமி உலா நடைபெறும்.

    8-ம் தேதி அன்று இரவு 7.30 மணிக்கு வள்ளிதெய்வானை-முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் வெள்ளிரதத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது

    9-ம் தேதி (வியாழக்கிழமை) தைப்பூத்திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கு இனியாள் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 10.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு, தேரில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடந்த பின்னர் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    நான்கு ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு 7.30 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் தெப்பத்தேர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    Next Story
    ×