search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவாலயங்களில் நடத்தப்படும் லட்சுமி பூஜை
    X

    சிவாலயங்களில் நடத்தப்படும் லட்சுமி பூஜை

    சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகா கைலாயத்தின் எட்டு திசைகளிலும், அஷ்டலட்சுமி வாசல் உள்ளது என்று சிவபுராணம் கூறுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோத்சவத்திற்கு முன்னதாக தனபூஜை என்னும் பெயரில் லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு புறமும் உள்ள நான்கு வாசல்களின் மேலும் மகாலட்சுமி, தோரண சக்தியாக வீற்றிருப்பாள். இவளை, சாந்தி லட்சுமி, பூதிலட்சுமி, பலலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என்று அழைப்பார்கள்.

    யாக குண்டங்களின் வடமேற்கு திசையில் மகாலட்சுமியை கலசத்தில் எழுந்தருளச் செய்து பூஜிப்பர். இவளுக்கு மண்டலரூப லட்சுமி என்று பெயர். ஒருமுறை மகாலட்சுமி செய்த தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், பத்து கரங்களுடன் அவள் முன்னே தோன்றி நடனமாடினார்.

    அந்த தாண்டவம் “லட்சுமி தாண்டவம்“ என்று அழைக்கப்பட்டது. இதுபற்றி திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) திருத்தளிநாதர்கோவில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வூரில் திருமகள், சிவனை வழிபட்டதால், அவளது பெயரால் இந்தகோவில் “ஸ்ரீதளி” என்றும், ஊர் “திருப்புத்தூர்” என்றும், திருக்குளத்திற்கு “ஸ்ரீதளி லட்சுமி தீர்த்தம்“ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    “ஸ்ரீ”, “திரு” ஆகிய இரண்டு பெயர்களும் மகாலட்சுமி யைக் குறிக்கும். இவ்வூர் மட்டுமின்றி லட்சுமி தாயார், சிவபெருமானை திருவாரூர் தியாகராஜர்கோவில், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோவில் ஆகிய தலங்களிலும் சிவனை வழிபட்டிருக்கிறாள். இவை லட்சுமி தலங்களாக கருதப்படுகின்றன. இவ்வூர்களில் உள்ள தீர்த்தங்களுக்கு லட்சுமி தீர்த்தம் என்றே பெயர்.

    திருவாரூர் போல ராமேசுவரம் தலத்திலும் லட்சுமி முக்கியத்துவம் பெறுகிறாள். அதன் என்னணியில் உள்ள வரலாறு வருமாறு:-

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்கு புத்திரப்பேறு இல்லை. குழந்தை பாக்கியம் வேண்டி, இராமேஸ்வரத்தில் தீர்த்த நீராடினான்.
    அப்போது அவனுக்கு அருள எண்ணிய மகாலட்சுமி, அங்குள்ள சேது தீர்த்தக்கரையில் குழந்தையாகத் தவழ்ந்தாள். தனித்திருந்த குழந்தையைக்கண்ட மன்னன், அவளை எடுத்து வளர்த்தான். “சேதுலட்சுமி” எனப்பெயரிட்டான்.

    அவள் தனது பருவ வயதில் மகாவிஷ்ணுவையே கணவராக அடைய வேண்டி, இங்கு ஒரு தீர்த்தம் உண்டாக்கி ராமநாதசுவாமியை வணங்கினாள். அவளை மணக்க எண்ணிய மகாவிஷ்ணு, ஒருசமயம் இளைஞனின் வடிவில் இங்கு வந்தார். சேதுலட்சுமியின் கையைப் பிடித்து வம்பு செய்தார். அரண்மனைக்கு தகவல் பறந்தது.

    மன்னன் கோபத்துடன் வந்து, திருமாலைக் தைது செய்து சிறையில் அடைத்தான். அவர் தப்பிச்செல்ல முடியாதபடி காலில் சங்கிலியைக் கட்டிவிட்டான்.
    அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, தானே இளைஞனாக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த மன்னன், தன் மகளை அவருக்கே மணம் முடித்து தந்தான். மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் மன்னனுக்கு காட்சி தந்தான்.

    இவ்வாறு மன்னனால் சிறைப்படுத்தப்பட்ட சேதுமாதவருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. இவரை, “ஆதிமாதவர்” என்றும் அழைக்கிறார்கள். சுவாமியின் காலில் தற்போதும் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.

    தீர்த்தத்திற்கு சிறப்பு பெற்ற இத்தலத்தில் லட்சுமியின் பெயரில் ஒரு தீர்த்தம் (தெப்பக்குளம்) உள்ளது. ராமேஸ்வரத்திலுள்ள 22 தீர்த்தக்கட்டங்களில், இதுவே முதல் தீர்த்தமாகும். தீர்த்த நீராடுபவர்கள் இதில் நீராடிய பிறகே, பிற தீர்த்தங்களில் நீராடுகிறார்கள். இத்தீர்த்தக் கரையில் மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி உள்ளது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் உற்சவர் லட்சுமி அலங்கரிக்கப்பட்டு, உட்பிரகாரத்தில் உலா வருகிறாள். இத்தகைய திருமகள் விழா தமிழ்நாட்டில், வேறு சிவாலயங்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகா கைலாயத்தின் எட்டு திசைகளிலும், அஷ்டலட்சுமி வாசல் உள்ளது என்று சிவபுராணம் கூறுகிறது. இவற்றில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள வாசல்களை முறையே, ஸ்ரீ துவாரம், லட்சுமி துவாரம், வாருணி துவாரம், கீர்த்தி துவாரம் என்று அழைக்கிறார்கள்.

    ஸ்ரீ, வாருணி, கீர்த்தி ஆகிய பெயர்கள் மகாலட்சுமியையே குறிக்கும்.
    Next Story
    ×