search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா: தென்பெண்ணையாற்றில் சாமிகளுக்கு தீர்த்தவாரி
    X

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா: தென்பெண்ணையாற்றில் சாமிகளுக்கு தீர்த்தவாரி

    கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்பெண்ணையாற்றில் சாமிகளுக்கு நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள 6 மாதங்கள் தேவர்களுக்கு பகல்பொழுதாகவும் (உத்திராயண புண்ணியகாலம்), ஆடி முதல் மார்கழி வரை உள்ள 6 மாதங்கள் இரவாகவும்(தட்சிணாயண புண்ணியகாலம்) இருக்கும் என்பது ஐதீகம்.

    உத்திராயண புண்ணியகாலத்தின் தொடக்க நாளான தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் இருந்து 5-வது நாளில் ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக எடுத்து வந்து தீர்த்தவாரி நடைபெறும். அப்போது சாமிகளுடன் சேர்ந்து பக்தர்களும் தீர்த்தமாடினால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

    அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தலைநகரமான கடலூரில் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் உள்ள பாலத்தின் வலதுபுறம் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் ஆற்றுத்திருவிழா கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் மாட்டுவண்டி மற்றும் மினிலாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் வைத்து மேள தாள இசையுடன் ஊர்வலமாக தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு எடுத்து வரப்பட்டனர்.

    அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து ஆற்றுக்குள் மண்மேடான பகுதியில் இருந்தபடி சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆற்றுத்திருவிழாவில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், மஞ்சக்குப்பம் எல்லையம்மன், ராதாகிருஷ்ணன் நகர் முத்துமாரியம்மன், தாழங்குடா குப்பத்து மாரியம்மன், உச்சிமேடு ஏழை முத்து மாரியம்மன், பொட்லாயி அம்மன், பாகூர் பிள்ளையார்குப்பம் சிவசுப்பிரமணியசாமி, பெரியகங்கணாங்குப்பம் ஏழுகரக மாரியம்மன், சின்ன கங்கணாங்குப்பம் சந்தனமாரியம்மன், கரிக்கன்நகர் முத்துமாரியம்மன், மணப்பட்டு ஆதிபராசக்தி, கீழ்பரிக்கல்பட்டு பூண்டியம்மன், பெரியகாட்டுப்பாளையம் எல்லையம்மன், பெரிய கன்னிகோவில் மன்னாதீஸ்வரர், நாணமேடு மாரியம்மன், கிருமாம்பாக்கம் சோலை வாழியம்மன், சீரடி சாய்பாபா, புதுப்பாளையம் துர்க்காளம்மன், வில்வராயநத்தம் சுப்பிரமணியசாமி உள்பட கடலூர் மற்றும் புதுச்சேரி மாநில கிராம கோவில்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

    விழாவையொட்டி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து பெண்ணையாறு செல்லும் சாலையின் இருபுறமும் கரும்பு சாறு, இனிப்பு வகைகள், பழங்கள், விளையாட்டு பொம்மைகள், வளையல்கள், பாத்திரங்கள் போன்ற கடைகள் வைத்து வியாபாரம் செய்ததையும் காண முடிந்தது. ஆற்றுத்திருவிழாவுக்கு மட்டுமே வரும் சிறுவள்ளிக்கிழங்கு விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.

    விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களின் வசதிக்காக கடலூர் மட்டுமின்றி பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பெண்ணை ஆற்றுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், மருதாடு, வெள்ளப்பாக்கம், அழகியநத்தம், நத்தப்பட்டு, உண்ணாமலைசெட்டிச்சாவடி, வெளிச்செம்மண்டலம், மேல்பட்டாம்பாக்கம் உள்பட 10 கிராமங்களில் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இதில் கோவில்களில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட உற்சவர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு காலை 8 மணியில் இருந்தே ராயர்பாளையம், அருங்குணம், திருவதிகை, சிறுகிராமம், தாழம்பட்டு, பணிக்கன்குப்பம், காடாம்புலியூர் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து டிராக்டர், மாட்டு வண்டிகள் ஆகியவற்றில் 50-க்கும் மேற்பட்ட சாமிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் சாமிக்கு தேங்காய்பழம் படைத்து வழிபட்டனர்.

    இதே போல் விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், அத்தியூர்திருவாதி, மரகதபுரம், திருப்பச்சாவடிமேடு, சின்னக்கள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் விழுப்புரம் கே.கே.சாலை கன்னியம்மன், பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன், ஜானகிபுரம் அங்காளம்மன், மாரியம்மன், விநாயகர், கண்டமானடி கெங்கையம்மன், சாலாமேடு முத்துமாரியம்மன், விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி முத்துமாரியம்மன், நரசிங்கபுரம் மாரியம்மன், வேலியம்பாக்கம் முருகன், கீரிமேடு கெங்கையம்மன், மேலமங்கலம் அங்காளம்மன், வழுதரெட்டி கெங்கையம்மன், தடுத்தாட்கொண்டூர் அங்காளம்மன் உள்ளிட்ட ஏராளமான சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்த பின்னர் பொதுமக்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத்திருவிழாவில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர், ஆலங்குப்பம் பாண்டுரங்கன், பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி, கோதண்டராமர், தடுத்தாட்கொண்டூர் இளஞ்சோலை மாரியம்மன், திருமுண்டீச்சரம் மாரியம்மன், பொய்கைஅரசூர் மாரியம்மன், மேலமங்கலம் ஆதிகேசவ பெருமாள், ஆ.நத்தம் வைகுண்டவாச பெருமாள் உள்ளிட்ட ஏராளமான சாமிகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

    திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத்திருவிழாவில் மணலூர்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதுதவிர திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சாமி சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மேள, தாளம் முழங்க தீர்த்தவாரி நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, வசந்தம் கார்த்திகேயன், பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயணசாமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத்திருவிழாவில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து சாமி சிலைகள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    இங்கு நடந்த விழாவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    திருக்கோவிலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் செல்லப்பிள்ளை தலைமையில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×