search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆகம விதிமுறைகளை மீறி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் சட்டை அணிந்து செல்லும் பக்தர்கள்
    X

    ஆகம விதிமுறைகளை மீறி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் சட்டை அணிந்து செல்லும் பக்தர்கள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் ஆகம விதிமுறைகளை மீறி பக்தர்கள் சட்டை அணிந்து செல்வதை தடுக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
    கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த கோவில் 1956-ம் ஆண்டுக்கு முன்பு குமரி மாவட்டம் கேரளாவில் உள்ள பழைய திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் கீழ் இருந்ததால் கேரள முறைப்படி பூஜைகள் நடந்து வந்தது. அதன்படி கேரள ஆகம விதிமுறையை பின்பற்றி இந்த கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த கோவில் வழக்கப்படி ஆண்கள் சட்டை, பனியன் அணியாமல் வேட்டி மற்றும் பேண்ட் அணிந்து தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இது சம்பந்தமாக அறிவிப்பு பலகை தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் எழுதி கோவிலின் நுழைவாசலில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஆண் பக்தர்கள் சட்டை அணியாமல் வேட்டி மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து வந்தனர். கூட்ட நேரங்களில் அதிகப் படியான பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதால் கோவில் நிர்வாகம் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் சில ஆண் பக்தர்கள் இந்த கோவிலின் ஆகம விதிமுறையை மீறி சட்டை அணிந்தபடி கோவிலின் மூலஸ்தானம் வரை சென்று அம்மனை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.

    இதைப் பார்த்து மற்ற பக்தர்களும் நாங்களும் கோவிலுக்குள் சட்டை அணிந்து செல்வோம் என்று கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதை தினமும் காண முடிகிறது. கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்குள் ஆகம விதிமுறையை மீறி பக்தர்கள் சட்டை அணிந்து செல்ல கோவில் நிர்வாகம் அனுமதிக்க கூடாது எனவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பக்தர்கள் சங்கம், இந்து முன்னணி போன்ற பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளன.
    Next Story
    ×