search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆற்றுத் திருவிழாவில் தீர்த்தவாரிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிகளை படத்தில் காணலாம்
    X
    ஆற்றுத் திருவிழாவில் தீர்த்தவாரிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிகளை படத்தில் காணலாம்

    சோரியாங்குப்பம், கரையாம்புத்தூரில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்

    சோரியாங்குப்பம், கரையாம்புத்தூரில் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பத்தில் பொங்கல் பண்டிகையின் 5-வது நாளன்று தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆற்றுத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலையிலேயே பொதுமக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர்.

    விழாவையொட்டி பாகூர், குருவிநத்தம், இருளஞ்சந்தை, குடியிருப்புபாளையம், சேலியமேடு, சேலியமேடு பேட், கரைமேடு உள்பட 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் டிராக்டர், மாட்டுவண்டி போன்ற பல வாகனங்களில் ஊர்வலமாக தென்பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.

    திருவிழாவில் பாகூர், சோரியாங்குப்பம் மற்றும் புதுவை, தமிழக பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரையாம்புத்தூர், சொரப்பூர், கலிஞ்சிக்குப்பம், கலிஞ்சிக்குப்பம் பேட், வீராணம் ஆகிய கிராமங்களில் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஆற்றங்கரை பகுதிகளில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் புதுச்சேரி மாநில தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் தலைமையில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்களும், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
    Next Story
    ×