search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலம் நெத்திமேடு கரியபெருமாள் கோவிலில் அலைமோதிய மக்கள் கூட்டம்
    X

    சேலம் நெத்திமேடு கரியபெருமாள் கோவிலில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    காணும் பொங்கலையொட்டி சேலம் நெத்திமேடு கரியபெருமாள் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
    பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான நேற்று காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொதுவாக காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுலாதலம் மற்றும் கோவில்களுக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று காணும் பொங்கல் விழாவினை சேலம் மாநகர பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சேலம் நெத்திமேடு மலையில் கரியபெருமாள் கோவில் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் ஐயப்பன், பாலதண்டாயுதபாணி மற்றும் மலையில் உச்சிப்பிள்ளையார், ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளன. காணும் பொங்கலையொட்டி நேற்று காலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர்.

    இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மலை உச்சியில் உள்ள மூலவர் கரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சாமிகளுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் மாநகர் முழுவதும் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த மக்கள் 500 படிகளை ஏறிச்சென்று மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர். மலைப்பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம், இலவச நீர்மோர், குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. காணும் பொங்கலையொட்டி நேற்று காலை முதல் மாலை வரையிலும் கோவிலில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்களின் வருகையினையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்களும், அவர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்டது.

    ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி பூங்காவிலும் நேற்று வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஏராளமானோர் குடும்பத்தினருடன் சென்று வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டு காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், ஏராளமான காதல் ஜோடிகளும் பூங்காவில் ஆங்காங்கே தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததை காணமுடிந்தது.

    அதேபோல், சேலம் 4 ரோடு அருகேயுள்ள அண்ணா பூங்காவிலும் நேற்று காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் வரத்தொடங்கினர். இதனால் பூங்காவில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல்களில் ஏறி விளையாடி மகிழ்ந்தனர்.

    சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை முனியப்பனுக்கு பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். சில பக்தர்கள் அங்கேயே அசைவ உணவை சமைத்து உறவினர்களுக்குபரிமாறி தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். அஸ்தம்பட்டி முனியப்பன் கோவிலிலும் பொதுமக்கள் பலர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    Next Story
    ×