search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலையின் மகிமை
    X

    திருவண்ணாமலையின் மகிமை

    மலையே இறைவனாக இருப்பது திருவண்ணாமலையில் தான். இந்த திருவண்ணாமலையை பற்றிய சிறப்பை கீழே விரிவாக பார்க்கலாம்.
    பொதுவாக மலைமீது இறைவன் குடியிருப்பார். ஆனால் மலையே இறைவனாக இருப்பது திருவண்ணாமலையில் தான். இந்த மலையின் உயரம் 2688 அடி. மலையின் சுற்றுப் பாதை 14 கிலோமீட்டர். கிரிவலப் பாதையின் பல இடங்களில் இருந்து மாறுபட்ட பல வடிவங்களில் மலை காட்சி தருவது சிறப்பம்சம். அருணன் என்றால் சூரியன் எனப் பொருள். அசலம் என்றால் கிரி அல்லது மலை என்று பொருள். ஜோதி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி தருவதால், அருணாசலம் என்று பெயர் பெற்றது.

    இந்த மலை கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்ந்ததாக புராணம் கூறுகிறது. இந்த மலை நெருப்பினால் உருவான மலை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    மலையைச் சுற்றி எட்டு திசைகளிலும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. குபேரலிங்கத்திற்கு முன்னதாகவே பஞ்சமுக மலை தரிசனத்தைக் காணலாம்.

    கிரிவலப்பாதையில் இடுக்குப் பிள்ளையார் கோவில் உள்ளது. மலையின் மையப் பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமணமகரிஷி குகை எனப் பல்வேறு குகைகள் அமைந்துள்ளன.

    அண்ணாமலை லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையைச் சுற்றும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் தீரும் என்பது ஐதீகம். பவுர்ணமி தினம் மட்டுமல்ல. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு என்பதால் அதற்கேற்ப மலையைச் சுற்றலாம்.
    Next Story
    ×