search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜென் கதை: பார்வையே ஆயுதம்
    X

    ஜென் கதை: பார்வையே ஆயுதம்

    ‘சிறந்த அம்பு எய்தல் என்பது, அம்பு எய்யாதிருப்பது’ என்பது. ஆம்! பார்வையாலேயே வீழ்த்தும் வல்லமை பெற்றவருக்கு, ஆயுதம் எதற்கு?
    இளைஞன் ஒருவனுக்கு சிறந்த வில்லாளியாக வர வேண்டும் என்று ஆசை. அதற்காக பயிற்சி பெற சரியான குருவைத் தேடிப் பிடித்தான்.

    அந்த குரு அவனுக்கு, கண் இமைக்காமல் பார்ப்பது எப்படி என்பதை முதலில் கற்றுக்கொடுத்தார். அதன்படி அவனை வீட்டில் தறி நெய்யும் போது அதைப் பார்த்துப் பழகும்படி கூறினார். ‘அப்போதுதான் பொருட்களைக் கூர்மையாகப் பார்த்தால் சின்னவை எல்லாம் பெரியதாகத் தெரியும்’ என்று அறிவுறுத்தினார். இளைஞனும் அப்படியேச் செய்தான். பின்னர் புழு, பூச்சி களை எல்லாம் கூர்மையாகப் பார்த்து, மூன்று ஆண்டுகளில் பயிற்சி பெற்றுத் தேர்ந்தான்.

    அதன்பிறகு அவனுக்கு, குரு வில்வித்தையைக் கற்றுக்கொடுத்தார். அவனும் சிரத்தையுடன் கற்றுக்கொண்டு, யாராலும் வெல்ல முடியாத அளவுக்கு வல்லமை படைத்தவன் ஆனான்.

    வளர்த்த கிடா மார்பில் பாய்வதைப் போல, ஒரு நாள் தன் குருவிடமே அந்த இளைஞன், தன்னுடைய வலிமையைக் காட்டினான். குரு வயல் வழியாக தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் பின்னால் இருந்து அவருக்குத் தெரியாமல் அம்பு தொடுத்தான். அவர் ஞானத்தால் உலகை அறியும் திறன் பெற்றவர். தன்னை நோக்கி வரும் அம்பை உள்ளுணர்வால் அறிந்துகொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில், ஒரு முள் புதரில் இருந்து ஒரு குச்சியை ஒடித்து அதை வைத்து அம்பைத் தடுத்தார்.

    பின்னர் அந்த இளைஞன், குருவிடம் மன்னிப்பு கேட்டான். அவரும் அவனை மன்னித்து தன்னைவிடப் பெரிய குருவிடம் அனுப்பிவைத்தார்.

    காடு, மலைகளையெல்லாம் கடந்து ஒரு மலைக் குகையில் அந்த மகா குருவைச் சந்தித்தான் இளைஞன்.

    அவரிடம், ‘சுவாமி! நான் சிறந்த வில் வீரனா என்று கூறுங்கள்?’ என்றபடி, உயரத்தில் பறந்து கொண்டிருந்த பறவையை வில்லால் வீழ்த்திக் காட்டினான்.

    குருவிற்கு சிரிப்புதான் வந்தது.

    ‘நீ வில் அம்பு கொண்டு வீழ்த்த கற்றுக்கொண்டிருக்கிறாய். ஆனால் எய்யாமல் எய்வது எப்படி? என்று கற்றுக்கொள்ளவில்லையே’ என்றவர், தன்னுடன் வரும்படி அழைத்துச் சென்றார்.

    மலையின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அதற்கு மேல் செல்ல வழிகிடையாது. இன்னும் ஒரு சில அடிகள் வைத்தாலும், பள்ளத்தில் விழுந்து மரணிக்கத்தான் வேண்டும். அப்படி ஒரு இடம். மலை உச்சியின் நுனிக்கு வரும் படி இளைஞனை அழைத்தார் குரு. அவனுக்கோ பயத்தில் கை, கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் சமாளித்தபடி அருகில் சென்றான்.

    ‘இப்போது வில் அம்பை எடு..’ என்றவர், உயரத்தில் பறந்த ஒரு பறவையை சுட்டிக்காட்டி, அதை வீழ்த்தும்படி கூறினார். அவன் வில்லை வளைப்பதற்குள், குருவானவர், தன் பார்வையாலேயே பறக்கும் பறவையை வீழ்த்திவிட்டார்.

    தான் ஒரு சிறந்த வில்லாளி என்று நினைத்திருந்த இளைஞனின் கர்வம், அப்போதே அடங்கிப் போனது. பின்னர் பல ஆண்டுகள் மகா குருவுடன் தங்கியிருந்து, அவரிடம் வில் வித்தை மட்டுமின்றி, ஞானத்தையும் கற்றுத் தேர்ந்தான்.

    அவனுக்கு அப்போதுதான் புரிந்தது, ‘சிறந்த அம்பு எய்தல் என்பது, அம்பு எய்யாதிருப்பது’ என்பது. ஆம்! பார்வையாலேயே வீழ்த்தும் வல்லமை பெற்றவருக்கு, ஆயுதம் எதற்கு?

    Next Story
    ×