search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலையில் நடக்கும் பூஜைகள்
    X

    சபரிமலையில் நடக்கும் பூஜைகள்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் பூஜைகள் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    1008 கலச பூஜை :

    இந்த பூஜை, முதல் நாள் மாலையிலிருந்து மறுநாள் முடிய தந்திரியால் நடத்தப்பெறும். இதற்கு செலவு அதிகம். இதற்கு சகஸ்ர கலச பூஜை என்ற பெயரும் உண்டு. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று அர்த்தம்) இந்த பூஜைக்காக 18 முறை சந்நிதி திறந்து பூஜை செய்யப்படும். இவற்றில் உபயதாரர் கலந்து கொள்ளலாம். முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

    லட்சார்ச்சனை :

    ஐயன் நாமத்தை ஒரு லட்சம் தடவை சொல்லி நடத்தும் பூஜை. இதற்கு கலச பூஜை போல் அதிகம் செலவில்லை. சபரிமலை தேவஸ்தானத்தில் முன்னதாக பதிவு செய்ய வேண்டும்.

    புஷ்பாஞ்சலி :

    புஷ்பாஞ்சலி தினமும் இரவு 8 மணி அளவில் ஐயப்பனுக்கு பக்தர்களால் செய்யப்படும் பூஜை. புஷ்பாஞ்சலி செய்கிற அன்றே சபரிமலையில் பணம் கட்டி அன்றே செய்யலாம். ஒரு நாளைக்கு 10 புஷ்பாஞ்சலி கூட நடைபெறுகிறது. புஷ்பாஞ்சலி செய்பவரே பூக்களை சபரிமலைக்கு கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு அர்ச்சனை செய்யக்கூடிய ரோஜா, அரளி, துளசி, மல்லிகை என எல்லாவித பூக்களையும் கூடையில் நீங்கள் எடுத்து வர வேண்டும்.

    பக்தர்கள் நல்ல புஷ்பங்களை பக்திப் பூர்வமாககொடுக்க வேண்டும். உப தேவதைகளான கணபதி, நாகராஜா முதலியவர்களுக்கு அபிஷேகம் செய்த பிறகுதான் ஐயப்பனுக்கு செய்யப்படும். ஒவ்வோர் அபிஷேகத்திற்கும் தீபாராதனை செய்யப்படும். இந்த பூஜைக்கு தற்சமயம் நிறைய கூட்டம் வருகிறது. நல்ல புஷ்பங்களை சுத்தமானதாக எடுத்து வரவேண்டும்.

    அஷ்டாபிஷேகம் :

    அஷ்டம் என்றால் எட்டு என்று அர்த்தம். எட்டு வித அபிஷேகப்பொருள்களால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வதால் இந்தப்பெயர் கூறப்படுகிறது. விபூதி, சந்தனம், பால் , பன்னீர் , சொர்ணம் (ஒரு ரூபாய் நாணயம் 108), தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகியவை, சுத்தமானதாக நீங்களே எவ்வளவு உங்களால் முடியுமோ, அவ்வளவு கொண்டு வர வேண்டும்.

    இது தவிர சிலர் கங்கை நீர், தயிர் போன்ற அபிஷேகப் பொருள்களும் கொண்டு வருகின்றனர். காலை 9 மணி அல்லது 10 மணிக்கு பக்தர்களின் நெய் அபிஷேக கூட்டமில்லாத நேரத்தில் மேல் சாந்தியால் இது செய்யப்படுகிறது. முன்பதிவு செய்யத் தேவையில்லை.

    அஷ்டாபிஷேகம் சமயம் 15 பேர் வரை ஐயப்பன் முன்னால் (உண்டியல் அருகில்) 15 நிமிடம் வரை தரிசனம் செய்யவும், பலவித அபிஷேகங்களில் ஐயனைக் காணும் பாக்கியம் கிடைப்பதாலும் இது பலருக்கும் மிகவும் பிடித்த பூஜையாக உள்ளது. அபிஷேகம் செய்த பொருள்களில் பெரும்பகுதியை நம்மிடமே திருப்பித் தருவதால் அதை ஊருக்கு கொண்டு வந்து அனைவருக்கும் விநியோகிக்கலாம்.

    கணபதி ஹோமம் :

    இது தினமும் காலை 4.30 மணிக்கு சபரி மலையில் ஸ்ரீ கோயில் முன்பாக ஷோபாவனத்தில் (நாம் சாமி கும்பிட நிற்கும் இடத்திற்கு பின்புறம் உள்ள மேடையில்) நடைபெறும். பக்தர்கள் 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கிறார்கள். முதல் நாள் மாலை 7 மணிக்கு சபரிமலை தேவஸ்தான ஆபீசில் நபருக்கு 50 ரூபாய் வீதம் பணம் கட்டி, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். கணபதி ஹோமத்தில் கலந்து கொள்பவர்கள் ஐயப்பனை காலை நடைதிறப்பு பூஜையில் தரிசனம் செய்யலாம். முடிந்தால் அப்போதே உங்களுடைய நெய் அபிஷேகமும் செய்து கொள்ளலாம்.

    கலபாபிஷேகம் (சந்தானபிஷேகம்)  :

    சுத்தமான சந்தனத்தை அரைத்து மண்டபத்தில் பிரத்யேகமாக பூஜை செய்து தனிக்கலசத்தில் சந்தனம் நிறைத்து, பூஜை செய்து முன் மண்டபத்தில் வைக்கப்படும். பிறகு உச்ச பூஜைக்கு முன்னால், தந்திரியும் மேல் சாந்தியும் சேர்ந்து வாத்தியங்களோடு கோவில் பிரகாரம் சுற்றி வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.
    Next Story
    ×