search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் 9-ந் தேதி கும்பாபிஷேகம்
    X

    ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் 9-ந் தேதி கும்பாபிஷேகம்

    ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சீனிவாசபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
    வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் கடந்த 2007-ம் ஆண்டு தங்கக்கோவில் கட்டப்பட்டது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த நிலையில் தங்கக்கோவில் வளாகத்தில் வெங்கடாஜலபதியாகிய சீனிவாச பெருமாளுக்கு கோவில் அமைக்க சக்தி அம்மா முடிவு செய்தார். அதன்படி கலைநயத்துடன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபான மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றுடன் மூலஸ்தான விமானம், ஸ்ரீஆனந்த நிலைய விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மகாகும்பாபிஷேகம் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு திருஅஷ்டாஹர, பஞ்ச சூக்த, சுதர்சன ஹோமங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4-30 மணிக்கு மேல் ஆசார்யா அனுக்ஞை, பகவத் அனுக்ஞை, மிருத் சங்க்ரஹணம், அக்னி ஆராதனை, யாகசாலை பூஜை ஆகியவை தொடங்குகிறது.

    இதற்காக சீனிவாச பெருமாளுக்கு நவகுண்டங்களுடன் யாகசாலையும், தர்மாதி பீடம் என்னும் பஞ்சாசன வேதிகையும், கோபுர விமான பரிவாரங்களுக்கு 6 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தர்மாதி பீடம் என்னும் பஞ்சாசன வேதிகையில் 5 தலைகளுடன் ஆதிசேஷன் என்னும் நாகபாம்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

    யாகசாலை வைபவங்களில் 4 வேதங்கள், உபநிஷத், நாலாயிர திவ்ய பிரபந்தம், பகவத்கீதை, சுதர்சன சதகம், ராமாயணம், ஸ்ரீமத் பாகாவதம், வேங்கடாஜல மகாத்மியம், அஷ்டாதச ரஹஸ்ய கிரந்தங்கள் முதலான பாராயணங்கள் ஓதப்படுகிறது.

    யாகசாலை பூஜையை சக்தி அம்மா தொடங்கி வைக்கிறார். திருக்கோவிலூர் மாதவன் ஐயர் தலைமையில் யாகசாலை பூஜை நடக்கிறது. தொழிலதிபர் எல்.பி.வீரப்ப செட்டியார் மற்றும் ஸ்ரீரங்கம், திருமலை திருப்பதி, காஞ்சீபுரம், திருக்கோட்டியூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நவதிருப்பதி கோவில்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமி பாடசாலைகளில் இருந்தும் 64 வேத பண்டிதர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×