search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக திகழும் சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக திகழ்வது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலாகும். இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறப்பு வாய்ந்தது. பல்வேறு சிறப்புடைய இந்த முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி சுப்பிரமணிய சுவாமி பரிவார தெய்வங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

    இதை தொடா்ந்து நேற்று இரவு 8 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி படிச்சட்டத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த விழா 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு நேரங்களில் படிச்சட்டம், இடும்ப வாகனம், பூதவாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    8-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் சப்பரத்தில் மயில்வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை விழா 12-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணியளவில் தேரோட்டமும், இரவு 9.30 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், தீபக்காட்சியும், 13-ந்தேதி காலை படிச்சட்டத்தில் சுவாமி புறப்பட்டு, காவிரி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×