search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

    சி.என்.பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லிக்குப்பம் அருகே சி.என்.பாளையம் மலையில் பிரசித்திபெற்ற புஷ்பகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஈஸ்வரன் சிலை இல்லை. ஆனால் விநாயகர் சிலை உள்ளது. எனவே விநாயகரை முன்னிலைப்படுத்தி விழாக்கள் நடத்தப்படுவதால் மலை பிள்ளையார் கோவில் எனவும், புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

    பழமைவாய்ந்த இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையினரும், கிராம மக்களும் முடிவு செய்தனர். அதன்படி பல லட்சம் ரூபாய் செலவில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிக்காக அஸ்திவாரம் தோண்டியபோது பாதாள அறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 3 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த அறையை பார்வையிட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தற்போது திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலையில் 4-ம் கால பூஜை நடந்தது. பின்னர் புனிதநீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, கோவில் கோபுர விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத், லட்சுமணன் எம்.பி., முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், கடலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் பழனிசாமி, வக்கீல் சிவமணி, குணா சாமில் டிம்பர்ஸ் உரிமையாளர் கண்ணன், ரஜினிகாந்த், முன்னாள் நகரசபை தலைவர் குமரன், முன்னாள் துணைத்தலைவர் சேவல்குமார், மீனாட்சி மெடிக்கல் ராஜா, செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் விழாக்குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வைத்திலிங்கம் செய்திருந்தார்.
    Next Story
    ×