search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    சென்னை அருகே உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா நாளை காலையில் நடக்கிறது. காலை 11 மணிக்குப் பிறகு பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    புகழ்பெற்ற அம்மன் திருத்தலங்களுள் சென்னை அருகேயுள்ள மாங்காடு, அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் பிரார்த்தனைத் தலங்களுள் முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும். இத்திருக்கோயில் அர்த்த மண்டபத்துடன் கூடிய கருவறையோடு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் அமைக்கப்பட்டது. பின் வந்த விஜயநகரப்பேரரசுகளால், மகாமண்டபம், சபா மண்டபம் என கற்றளி மண்டபங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இத்திருக்கோயிலில் இதற்கு முன் திருக்கும்பாபிஷேகம் 03.06.2001-ல் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த திருக்குடமுழுக்கின் பொருட்டு தற்போது இத்திருக்கோயிலில் ஏழுநிலை இராஜகோபுரம் பழுதுபார்த்து பஞ்சவர்ணம் தீட்டும் பணி ரூ.17 இலட்சம் செலவிலும், பக்தர்களின் நலன் கருதி பக்தர்களின் வசதிக்கேற்றவாறு ஒழுங்குவரிசை மண்டபம் ரூ.64 இலட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ளன.

    மூலவர் காமாட்சி அம்மன் விமானம், அருள்மிகு தபசு காமாட்சி விமானம், அருள்மிகு வரசித்தி விநாயகர் விமானம் முதலான விமானங்கள் பஞ்சவர்ணம் தீட்டும் பணி ரூ.4 இலட்சம் செலவிலும், அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் சுற்றுப் பிரகார மண்டபம் வர்ணம் தீட்டும் பணி ரூ.18 இலட்சம் செலவிலும் பிரகாரமண்டபத்தில் தட்டோடு பதிக்கும் பணி ரூ.22 இலட்சம் செலவிலும் திருக்கோயில் அலுவலகம், கட்டணச்சீட்டுகள் விற்பனை நிலையம், திருமடப்பள்ளி, தங்கத்தேர் நிறுத்தும் அறை, திருமதிற்சுவர் மற்றும் கருங்கற்கள் தரைத்தளம் அமைக்கும் பணி என ரூ.16 இலட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக மொத்தம் சுமார் 1 கோடியே 41 இலட்சம் செலவில் பழுது பார்த்து திருப்பணி நிதியின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    மூலவர் அருள்மிகு காமாட்சி அம்மன் விமானத்தில் உள்ள ஐந்து செப்புக்கலசங்கள், அருள்மிகு தபசுக்காமாட்சி அம்மன் விமானத்தில் மூன்று செப்புக்கலசங்கள், அருள்மிகு வரசித்தி விநாயகர் விமானத்தில் ஒரு கலசம் என மொத்தம் 9 கலசங்கள் சுமார் ரூ.24 இலட்சம் செலவில் உபயதாரர்கள் மூலம் தங்கரேக் ஒட்டப்பட்டு அதில் நிறுவப்பட உள்ளது. மேலும் அர்த்தமண்டபத்தில் உள்ள கதவுகளுக்கு உபயதாரர்மூலம் அஷ்டலட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நகாஸ் வேலைப்பாடுகளுடன் கொண்ட வெள்ளிக் கதவுகள் சுமார் ரூ.26 இலட்சம் மதிப்பில் பொருத்தப்பட உள்ளது. இத்திருக்கோயிலின் பழக்க வழக்கங்களின்படியும், ஆகமவிதிகளின்படி ஆலய அர்ச்சகர் குறிப்பிட்ட நன்னாளான 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7.32. மணிக்கு மேல் 9.21 மணிக்குள் திருக்கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருக்கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற அம்மனுக்கு 33 குண்டங்கள் கொண்ட உத்மபக்ஷ யாகசாலைகள், பரிவார சன்னதிகளுக்குத் தனி யாகசாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    திருக்கும்பாபிஷேகம் நிறைவு பெற்றவுடன் காலை 11.00 மணி அளவில் விழா நிறைவுறும். பொது மக்கள் தரிசனம் செய்ய காலை 11.00 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவார்கள். திருக்குடமுழுக்கில் கலந்துகொள்ள உள்ள ஆன்மிகப் பெரியோர்கள், பொதுமக்கள் வசதிக்காக காவல்துறை, உள்ளாட்சித்துறை, போக்குவரத்துறை, சுகாதாரத்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    இதையொட்டி நேற்று நடந்த மஹாகும்பாபிஷேக யாகசாலை சிறப்பு பூஜைகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், பரம்பரை தர்மகர்த்தா மணலி.ஆர்.சீனிவாசன், துணைஆணையர் / செயல்அலுவலர் இரா.வான்மதி, துறை அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×