search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனுக்கு காணிக்கை செலுத்த என்ன தகுதி வேண்டும்?
    X

    இறைவனுக்கு காணிக்கை செலுத்த என்ன தகுதி வேண்டும்?

    ஆன்மிக அறிவின்மையையும், இயலாமையையும் பயன்படுத்தி, நிர்ப்பந்தித்துப் பெறுவது காணிக்கை அல்ல, அது வெறும் பணமே.
    உலக வாழ்க்கையில் நமக்கு ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டும் என்றால், அது சம்பந்தப்பட்ட நபரை நமக்கு சாதகமாக திருப்பிக் கொள்ளும் வழிகள் பற்றி மனது சிந்திக்கிறது. பணம், பொருட்கள், பதில் உதவிகள் போன்றவை காரிய நிறைவேறுதலுக்காக கொடுக்கப்படுகின்றன.

    அந்த வகையில் மனிதர்களை மயக்கியோ அல்லது நெருக்கியோ காரியம் சாதித்துக் கொள்ளும் அதே நிலைப்பாட்டையே இறைவனிடமும் பலர் காண்பிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கை. ‘காணிக்கை போட்டுவிட்டான்’ என்பதற்காக எவருக்குமே காரியத்தை இறைவன் நிறைவேற்றித் தருவதில்லை.

    ‘காணிக்கை’ விஷயத்தில் இரண்டு அடிப்படை தகுதிகளை இறைவன் எதிர்பார்க்கிறார். ஒன்று: காணிக்கை செலுத்துபவனின் இறைபக்தி எப்படிப்பட்டது?, இரண்டாவது: அவன் கொண்டு வரும் காணிக்கை, இறைநீதிக்கு உட்பட்டதா? என்பதே. இந்த இரண்டில் ஏதாவது குறைபாடு இருந்தால், அந்தக் காணிக்கை வீண் என்பதையும், அது இறைவனால் ஏற்கப்படாது என்பதையும் உணர வேண்டும்.

    சரீர ரீதியான பாவங்கள், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள், ஜென்ம சுபாவங்களின் (பிறவிக்குணம்) அடிப்படையில் செய்யும் பாவங்கள் ஆகிய 3 வகையில் செய்யப்பட்ட பாவங்களை நிவர்த்தி செய்து (சம்பந்தப்பட்டவரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கேட்டு) மீட்பைப் பெறவேண்டும். மேலும், அவற்றை மீண்டும் செய்யாமல் இருக்க இறைவனின் பலத்தை நாடி வாழ்வதுதான் கிறிஸ்தவம் போதிக்கும் பக்தி வாழ்க்கையாகும்.

    இப்படி பாவத்தை நெருங்க விடாமல் போராடி வாழ்ந்து முடிப்பவனே இறுதியில் ரட்சிப்பை அடைகிறான். அதாவது, பாவங்களின் பிரதிபலிப்பாக அடுத்த வாழ்க்கையில் விதிக்கப்படும் தண்டனைகளில் இருந்தும்; எந்த இளைப்பாறுதலும் இல்லாமல், பாவம் மட்டுமே செய்யப்படக்கூடிய இடத்தில் (நரகத்தில்) அடுத்த வாழ்க்கை அமைந்துவிடுவதில் இருந்தும் மீட்கப்படுகிறான்.

    இப்படிப்பட்ட 3 விதமான பாவங்களில் இருந்தும் நீங்கி இருக்கும் நோக்கத்திலான பக்தி வாழ்க்கையை மேற்கொள்பவனே இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் தகுதியுடைவன். ‘அப்படிப்பட்ட தகுதி இல்லாமல் செலுத்தப்படும் காணிக்கையை வீண் என்றும், அதை சகிக்கமாட்டேன்’ என்றும் இறைவனே கூறியிருக்கிறார் (ஏசாயா 1:1116).

    ‘அக்கிரமத்தோடு செலுத்தும் காணிக்கை எந்த அளவாகவும் உச்சிதமாகவும் இருந்தாலும், அது தன்னை வருத்தமடையச் செய்கிறது’ என்று இறைவன் கூறுகிறார்.

    தகுதியற்றவனாகவும், தகுதிக்கு உட்படாததுமான காணிக்கைகள், இறைவனையே வருத்தமடையச் செய்துவிடுகிறது என்பதை உணர வேண்டும்.

    ‘கறையற்ற கைகளினால் தரப்படும் காணிக்கையை மட்டுமே அவர் விரும்பி ஏற்கிறார். இதில் அவர் அளவைப் பார்ப்பதில்லை. காணிக்கையின் அளவு கட்டளையிடப்படவில்லை (பொருத்தனை செய்தல் என்பது வேறு). அதன் அளவு எவ்வளவாக இருந்தாலும், பக்தியின் ஒரு பகுதி என்ற எண்ணத்தின்படி, அந்தக் கடமையை உற்சாகமாக செய்தால்தான் அதில் இறைவனின் பிரியம் இருக்கும்’ (2 கொரி.9:7).

    விருந்து பறிமாறும்போது கையில் அழுக்கு, அசுத்தம் இருந்தால், வெறுப்பினால் விருந்தாளி முகம் சுழிப்பானே. ஒரு மனிதனின் வெறுப்பைப் தவிர்ப்பதற்காக கையை சுத்தமாக வைத்திருக்கும் நாம், இறைவன் விஷயத்தில் மட்டும் அதை கவனிக்காமல் இருக்கலாமோ?

    ‘கறைகளுடனான கைகளுடன் படைக்கப்படும் காணிக்கையையும், அந்தக் கைகளால் ஏறெடுத்து செய்யப்படும் ஜெபத்தையும் கேட்கமாட்டேன்’ என்று ஆணித்தரமாக இறைவன் கூறிவிட்டார்.

    அப்படிப்பட்ட காணிக்கையை இறைவனே வெறுத்து ஒதுக்கு கிறார் என்றால், அவருக்கு தொண்டாற்றும் இறைப்பணியாளன், கறைபட்ட காணிக்கை என்று தெரிந்தால் அதை ஏற்பது நியாயமோ?

    பொய், லஞ்சம், மோசடி, ஏமாற்றுக்காரனின் காணிக்கையை வாங்கிக்கொண்டு அவனை ஆசீர்வதிப்பது இறைவனுக்கு முன்பாக நல்லதாகத் தோன்றுமோ?

    சபை என்றாலும், தனிநபர் என்றாலும், இறைவன் அளித்த ஊழியத்தின் வட்டத்தைத் தாண்டி எல்லையை அவர்களே பெரிதாக்கிக் கொண்டதால், தகுதியற்ற காணிக்கையை அவர் களால் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் காணிக்கையை வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் பலர் தங்களை சாய்த்துக் கொண்டார்கள்.

    தகுதியற்ற காணிக்கையை படைப்பது பற்றி இறைவன் காட்டியுள்ள கருத்துகளையும் இறைப்பணியாளர் பலர் கவனிப்பதும் இல்லை; அது தெரிந்திருந்தாலும் அதுபற்றி எச்சரிப்பதுமில்லை. ‘காணிக்கை தருபவனைப்பற்றியும், அவனது காணிக்கையின் தரம் பற்றியும் நான் எப்படி அறிவேன்’ என்று, இறைஆவியைப் பெற்றிருக்கும் இறைப்பணியாளனுக்கு கேள்வி எழாது. அப்படிப்பட்டவனுக்கு காணிக்கை பற்றிய நிர்வாகத்தை இறைவனே வகுத்தளிக்கிறார்.

    காணிக்கையின் அளவுக்கு ஏற்ப ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது பலரது எண்ணமாக உள்ளது. ஆன்மிக அறிவின்மையையும், இயலாமையையும் பயன்படுத்தி, நிர்ப்பந்தித்துப் பெறுவது காணிக்கை அல்ல, அது வெறும் பணமே. அறியாமல் தரப்படும்போது, காணிக்கை பற்றி எச்சரிக்காமல் விட்டுவிடுவதும் இறைவனுக்கு முன்பாக குற்றமே.
    Next Story
    ×