search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால் வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. நேற்று கேரளாவில் ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து ஆளும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த போராட்டத்தின் போது ஐயப்பப் பக்தர்களின் வாகனங்களை யாரும் தடுக்கக் கூடாது என்று முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறி இருந்தார். மேலும் ஐயப்பப் பக்தர்கள் தடையின்றி செல்ல போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஐயப்பப் பக்தர்கள் எந்த சிரமமின்றி சபரிமலைக்கு சென்றனர். நேற்று சபரிமலையில் கட்டுக் கடங்காத அளவிற்கு பக்தர் கள் குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் பம்பையில் இருந்தே பக்தர்களை போலீசார் ஒழுங்குப்படுத்தி அனுப்பினார்கள். இதனால் சன்னிதானத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள அப்பச்சிமேடு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

    சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய 12 மணி நேரம் வரை ஆனது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறும் நிலையும் ஏற்பட்டது.

    சபரிமலை செல்லும் காட்டுப் பாதையான புல்மேடு பாதை வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியாகும். இந்த புல்மேடு பாதை நேற்று பக்தர்கள் செல்வதற்கு வசதிக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இங்குள்ள சோதனை சாவடியில் பக்தர்கள் தங்கள் அடையாள அட்டையை காட்டி பதிவு செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் இதய நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் புல்மேடு பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் இந்த பாதை வழியாக செல்ல முடியும். பக்தர்கள் வசதிக்காக இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    நேற்று புல்மேடு வழியாக சென்ற பக்தர்கள் பல இடங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதை பார்த்ததாக வனத்துறையினரிடம் தெரிவித்தனர். எனவே பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

    தற்போது சபரிமலையில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 300 போலீசாரும் அதிரடிப்படை கமாண்டோ வீரர்களும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி. தலைமையில் 200 ஆயுதம் ஏந்திய போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சபரிமலை பகுதியில் ரோந்து சென்று பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.

    Next Story
    ×