search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியை காண திரண்டிருந்த பக்தர்கள்.
    X
    திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியை காண திரண்டிருந்த பக்தர்கள்.

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: சுவாமிக்கு இன்று இரவு திருக்கல்யாணம்

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரத்தை தொடர்ந்து இன்று இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது.
    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த ஆறுநாட்கள் கோவிலில் விரதமிருந்தனர்.

    சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடைபெற்றது. ஆறுநாட்களும் காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. நண்பகல் 12.45 மணிக்கு மேல் தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி மேள வாத்தியங்களுடன் சண்முகவிலாசம் வந்து பின்னர் அங்கிருந்து திருவாவடுதுரை ஆதிதின சஷ்டி மண்டபம் சென்று அங்கு சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் மஞ்சள்பொடி, மாவுபொடி, இளநீர், பால், தயிர் உள்பட பல அபிஷேக பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 3.30மணியளவில் சூரபத்மன் தன் படை வீரர்களுடன் ஆனந்தவள்ளி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கடற்கரைக்கு வந்தான். மாலை 4.15 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் அலங்காரத்துடன் கையில் வேல், மற்றும் வாள் ஏந்தி சூரனை வதம் செய்ய கடற்கரைக்கு வந்தார். முதலில் மாயை வடிவம் எடுத்த தாரகன் யானை முகம் எடுத்து சுவாமியை எதிர் கொண்டான். மாலை 5 மணிக்கு சுவாமி தன் வேலால் யானை முகம் கொண்ட தாரகனை வதம் செய்தார்.

    பின்னர் அவன் தம்பி சிங்க முகன் சுவாமியை சுற்றிவந்து நின்றான். அவனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்தார். இறுதியாக சூரனே சுவாமியிடம் போருக்கு வந்து நேருக்கு நேர் நின்றான் அவனையும் சுவாமி ஜெயந்திநாதர் 5.30 மணிக்கு வதம் செய்தார். பின்னர் சூரன் மரமாகவும் சேவலாகவும் உருமாறி சுவாமியிடம் போரிட வந்து சுவாமியின் வேலால் வதம் செய்யப்பட்டான்.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோவில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று சஷ்டி பூஜையில் வைக்கப்பட்ட சஷ்டி தகடுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    7-ம் திருவிழாவான இன்று (6-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 3மணிக்கு திறக்கப்பட்டது. 3.30மணிக்கு விஸ்வரூப தரிசனம் காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசுக்கு புறப்படுதல் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளி தோள்மாலை மாற்றுதல் நடைபெறுகிறது. இரவு 11.45 மணிக்கு மேல் அருள்மிகு தெய்வானை அம்பாளுக்கும் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் கோவில் வளாக மேலக்கோபுரம் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது.
    Next Story
    ×