search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி பண்டிகையையொட்டி திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது

    தீபாவளி பண்டிகையையொட்டி 13 நாட்கள் திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை நேற்று மூடப்பட்டது.
    ஹாசன் டவுன் பகுதியில் உள்ள ஹாசனாம்பா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக்கோவிலில் ஹாசனாம்பா அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி திறக்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த மாதம்(அக்டோபர்) 20-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி (அதாவது நேற்று) வரை 13 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சைத்ரா அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி கோவிலை மாவட்ட கலெக்டர் சைத்ரா திறந்து வைத்தார்.

    கோவில் திறக்கப்பட்ட நாள் முதல் கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டுமில்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், நடிகர், நடிகைகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஹாசனாம்பாவை தரிசித்து சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று கடைசி தினம் என்பதால், நேற்று முன்தினம் இரவு முதலே அம்மனை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல், நேற்று காலை 6 மணி வரை விடிய, விடிய நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

    அதன்பின்னர் நேற்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அம்மனுக்கு விசேஷ பூஜைகள், நெய் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் மீண்டும் மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் மதியம் 2.30 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது.

    அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகைகள், அலங்கார பெட்டிகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கோவில் அறநிலையத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த கோவிலில் நடை மூடப்படும் போது விளக்குகள் மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்படும். அடுத்த வருடம் கோவில் நடையை திறக்கும் போது விளக்கு அணையாமலும், பூஜை பொருட்கள் கெட்டு போகாமலும் இருக்கும் என்பது ஐதீகம்.
    Next Story
    ×