search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடி சாய்பாபாவின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது
    X

    சீரடி சாய்பாபாவின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது

    சீரடி சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    சீரடி சாய்பாபா துவாரகமாயி மசூதிக்குள் தானே இருக்கிறார்... வெளியில் நடப்பது அவருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நிறைய பேர் நினைத்தது உண்டு.

    ஆனால் சாய் அருள் பெற்ற ஒருவர், சாய் பற்றி நினைத்த ஒருவர், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவர்கள் பாபாவின் பார்வையில் இருந்து தப்பியதே இல்லை. பாபா தம் பக்தர்கள் ஒவ்வொருவரையும் தம் பார்வைக்குள்ளேயே வைத்திருந்தார்.

    இப்போதும் கூட அவர் பார்வையில் இருந்து எந்த ஒரு பக்தரும் விலகி விட முடியாது. எந்த பக்தன், என்ன செய்கிறான்? எந்த பக்தன், எத்தகைய வேண்டுதலுடன் தன்னை தேடி, நாடி வருகிறான் என்பதெல்லாம் இறை அவதாரமான சாய்பாபாவுக்கு மிக,மிக துல்லியமாகத் தெரியும்.

    அதனால்தான் பாபா, ஆத்ம தாகத்துடன் வந்தவர்களை மசூதிக்குள் வரவேற்று தன்னுடன் சேர்த்துக்கொண்டார். சுயநலத்துடன் வந்தவர்களை அவர் தன்பக்கம் அணுகக்கூட விட்டதில்லை. எந்த ஒருபக்தனும், மனத்துக்குள் எது பற்றி நினைத்தாலும் அதுவும் பாபாவுக்கு தெரிந்து விடும். அவரிடம் இருந்து தப்பவே முடியாது.

    ஒரு முறை பாபா தம் பக்தர்களிடம், “நீங்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும் அதை நான் அறிவேன்” என்றார். அதை அவர் தம் வாழ்நாளில் பல தடவை நடத்தி காட்டினார்.

    1915-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அற்புதம் இது.

    மும்பையைச் சேர்ந்த பலராம் மன்கர் என்ற பக்தர், சீரடிக்கு சென்று சாய்பாபாவை வழிபட முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் சாய்பாபா மீது மிகுந்த பக்தி கொண்ட தார்க்காட் என்பவரை சந்தித்து சீரடி செல்வது பற்றி கூறினார். “பாபாவுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமானால் தாருங்கள். கொண்டு போய் ஒப்படைத்து விடுகிறேன்” என்றார்.

    அதைக்கேட்டதும் தார்க்காட் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பாபாவுக்கு கொடுத்து அனுப்ப ஏதாவது உணவுப்பொருள் கிடைக்குமா என்று தேடினார். எதுவும் கிடைக்கவில்லை. அன்றைய தினம் காலை பாபா படம் முன்பு நைவேத்தியமாக படைத்த பால் கேக் மட்டுமே இருந்தது.

    பொதுவாக நைவேத்தியமாக படைத்ததை எடுத்து மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். என்றாலும் வேறு வழி இல்லாததால் அந்த “ பால் கேக்” கை எடுத்து நன்றாக பார்சல் செய்து அதை பாபாவிடம் கொடுத்து விடும்படி பலராம் மன்காரிடம் தார்க்காட் கொடுத்தார். அந்த பால் கேக் பார்சலை வாங்கிக்கொண்டு பலராம் சீரடிக்கு புறப்பட்டு வந்தார். சீரடியில் விடுதி ஒன்றில் தங்கினார்.

    அன்று மதியம் அவர் துவாரகமாயிக்கு சென்று பாபாவை பார்த்து தரிசனம் செய்தார். தான் கொண்டு வந்த பொருட்களை கொடுத்து பாபாவிடம் ஆசி பெற்றார். விடுதிக்கு திரும்பிய பிறகுதான், தார்க்காட் கொடுத்து அனுப்பிய பால் கேக்கை மறந்து விட்டது அவர் நினைவுக்கு வந்தது. சரி பிற்பகல் மீண்டும் பாபாவை தரிசனம் செய்யச் செல்லும் போது கொண்டு போய் கொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டார்.

    ஆனால் அவர் பிற்பகலில் பாபாவை பார்க்க சென்ற போதும், தார்க்காட் தந்த பால் கேக்கை எடுத்து வர மறந்து விட்டார். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு அந்த கேக் பற்றிய நினைவே வரவில்லை. பாபா அவரைப் பார்த்து மெல்லிதாக சிரித்தார்.

    “மும்பையில் இருந்து எனக்கு என்ன கொண்டு வந்தாய்? என்று கேட்டார். அதற்கு பலராம், “ எதுவும் கொண்டு வரவில்லை என்றார். “அப்படியா... எனக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வந்தாயா? என்று பாபா மீண்டும் கேட்டார். அப்போதும் பலராமுக்கு தார்க்காட் கொடுத்து அனுப்பிய பால்கேக் நினைவுக்கு வர வில்லை. “ எதுவும் கொண்டு வரவில்லை” என்றார்.

    பாபாவும் விடவில்லை. “நீ சீரடிக்கு புறப்படும் போது, என் பக்தை தார்க்காட் எனக்கு தின்பண்டம் தரவில்லையா?” என்றார். அப்போது தான் பலராமுக்கு மண்டையில் ‘சுரீர்’ என்று உறைத்தது. தார்க்காட் கொடுத்து அனுப்பிய பால்கேக்கை சுத்தமாக மறந்து விட்டோமே என்று வருந்தினார்.

    பாபாவிடம் மன்னிப்புக் கேட்ட அவர் விடுதி நோக்கி ஓடினார். அங்கு படுக்கை அருகில் தனியாக வைத்திருந்த “ பால் கேக்” பார்சலை எடுத்து கொண்டு மீண்டும் மசூதிக்கு திரும்பி - ஓடி வந்தார். பாபாவிடம் பால் கேக்கை பவ்வியமாக கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட சாய்பாபா அந்த கேக்கை ரசித்து, ருசித்து சாப்பிட்டார். இந்த நிகழ்வு மூலம் பாபாவின் பார்வையில் இருந்து யாரும் தப்ப இயலாது என்பது உறுதியானது.

    1911-ம்ஆண்டு நடந்த ஒரு சம்பவம்...

    சாய்பாபாவின் மகிமை பற்றி கேள்விப்பட்ட அரித்துவாரைச் சேர்ந்த தேவசுவாமி என்பவருக்கு பாபாவை பார்க்கும்ஆசை ஏற்பட்டது. உடனே அவர் குதிரை வண்டி ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்து சீரடிக்கு புறப்பட்டு சென்றார். சீரடியை நெருங்கும் போது துவாரகமாயி மசூதிமீது பறந்த கொடி அவர் கண்ணில் பட்டது. “ எளிமையாக வாழ்வதாக கூறும் ஒரு மகான் எதற்காக கொடியேற்றி இப்படி பந்தாவாக வாழ வேண்டும்” என்று அவர் மனதுக்குள் நினைத்தார்.

    இதனால் அவருக்கு பாபாவிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் குறைந்தது. சீரடியைத் தவிர்த்து விட்டு அரித்துவார் செல்ல அவர் முடிவு செய்தார். ஆனால் அவருடன் வந்தவர்கள் அதை ஏற்கவில்லை. “இவ்வளவு தூரம் வந்து விட்டோம் பாபாவை பார்த்து விட்டு போகலாம்” என்றனர்.

    அதற்கு தேவசுவாமி கட்டுப்பட வேண்டியதாயிற்று. அனைவரும் மசூதிக்குள் சென்றனர். அப்போது பாபா கோபத்துடன், “மசூதி மீது கொடி பறக்க விட்டிருக்கும் ஒரு சாதாரண சாதுவை ஏன் தரிசனம் செய்ய வர வேண்டும். வெளியே போ, மீண்டும் இந்த மசூதிக்குள் காலடி எடுத்து வைத்தால் நடப்பதே வேறு” என்றார்.

    பாபா இவ்வாறு கூறியதைக் கேட்டதும் தேவசுவாமி ஆடி போய் விட்டார். கடும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தார். தனது மனதில் நினைத்ததை பாபா எவ்வாறு இவ்வளவு துல்லியமாக அறிந்தார் என்று ஆச்சரியப்பட்டார். கண்ணீர் மல்க பாபா காலில் விழுந்து வணங்கினார். பாபா கோபம் தணிந்து அவரை ஏற்றுக் கொண்டு ஆசீர்வாதம் செய்தார்.

    தாணா நகரைச் சேர்ந்தவர் சோல்கர். அங்குள்ள கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார். பாபாவின் மகிமை பற்றி அறிந்த அவருக்கு சீரடி சென்று பாபாவை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும் என்று மனதில் அடங்காத ஆசை ஏற்பட்டது. கோர்ட்டில் தற்காலிக வேலை பார்த்து வந்த அவருக்கு சம்பள பணம் முழுவதும் குடும்பத்தை பராமரிக்கவே போதுமானதாக இருந்தது. எனவே அவர் தனக்கு வேலை நிரந்தரமானால் சீரடிக்கு வந்து பக்தர்களுக்கு கல்கண்டு வினியோகம் செய்வதாக பாபாவை நினைத்து வேண்டிக் கொண்டார்.

    அடுத்த மாதமே சோல்கருக்கு வேலை நிரந்தரமானது. பாபாவின் கருணையை நினைத்து சிலிர்த்த அவர் தன் செலவை குறைத்து, பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து அதன் மூலம் சீரடிசெல்ல திட்டமிட்டார். செலவை குறைக்க அன்று முதல் காபி, டீயில் சர்க்கரை சேர்க்க வில்லை. இதனால் அவர் நினைத்தபடி பணம் சேர்ந்தது.

    குறிப்பிட்ட ஒரு நாளில் அவர் கல்கண்டு வாங்கிகொண்டு சீரடிக்கு புறப்பட்டார். மசூதி முன்பு அமர்ந்திருந்த பக்தர்களுக்கு கல்கண்டு வினியோகம் செய்தார். பிறகு பாபாவை பார்க்க மசூதிக்குள் சென்றார். அவரைக் கண்டதும் சாய்பாபா முகம் சூரிய ஒளியாய் பிரகாசம் அடைந்தது. “வா... வா..” என்று அன்போடு அழைத்து ஆசி வழங்கினார்.

    அப்போது மசூதிக்குள் சீரடியைச் சேர்ந்த ஜோக் என்பவர் வந்து கொண்டிருந்தார். அவரை பாபா அருகே வருமாறு அழைத்தார். “ஜோக்.. இவர் நம் விருந்தாளி. இவரை உன் வீட்டுக்கு அழைத்துச் செல். முதலில் அவர் குடிக்க காபி கொடு. அந்த காபியில் நிறைய சர்க்கரை போட்டு கொடு. அவர் சர்க்கரை கலந்த காபி குடித்து ரொம்ப நாளாகி விட்டது” என்றார்.

    இதைக் கேட்டதும் சோல்கர் ஆச்சரியத்தில் மிதந்தார்.

    நாம் சர்க்கரை இல்லாமல் காபி குடித்தது இவருக்கு எப்படி தெரியும் என்று யோசித்து, யோசித்து தவித்தார். தனது ஒவ்வொரு செயலையும் இந்த மசூதிக்குள் இருந்தபடி பாபா கண்காணித்து இருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்தார். அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. பாபா காலில் விழுந்து குலுங்கி, குலுங்கி அழுதார். அவரை தூக்கி நிறுத்திய பாபா, “போய் வா, எதற்கும் கவலைப்படாதே, நான் இருக்கிறேன்” என்றார்..

    இந்த நிகழ்வு போல தொழு நோயாளி ஒருவரிடம் பாபா நடத்திய அற்புதம் உலகம் முழுவதும் வியந்து பேசப்பட்டது. அதுபற்றி அடுத்த வாரம் (வியாழக்கிழமை) பார்க்கலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×