search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவிரம்மா கோவில் திருவிழா நாளை தொடக்கம்: 3-வது நாளில் கருவறை கதவுகள் தானாக திறக்கும் அதிசயம் நடக்கும்
    X

    தேவிரம்மா கோவில் திருவிழா நாளை தொடக்கம்: 3-வது நாளில் கருவறை கதவுகள் தானாக திறக்கும் அதிசயம் நடக்கும்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேவிரம்மா கோவிலின் 5 நாள் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் 3-வது நாளில் பூஜை வேளையில் கருவறை கதவுகள் தானாக திறக்கும் அதிசயம் நடப்பதை காணலாம்.
    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மல்லேனஹள்ளி. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிண்டுகா என்ற பகுதியில் பிரசித்தி பெற்ற தேவிரம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

    இந்த கோவிலின் பின்புறம் சந்திரிதிருவோணமலை அமைந்துள்ளது. பாபாபுடன்கிரி, கெம்மன்குந்தி ஆகிய மலைகளுக்கு நடுவே ‘பிரமிடு‘ வடிவில் இந்த மலை அமையப்பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில், அம்மனின் விக்ரகம் வைக்கப்பட்டு சிறிய கோவில் எழுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு 5 நாட்கள் திருவிழா நடக்கிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு முதல் பக்தர்கள் மலைஅடிவாரத்தில் உள்ள கோவிலில் குவியத் தொடங்கி விடுவார்கள். பின்னர் அவர்கள் கரடுமுரடான மலைப்பாதையில் நடைபயணம் செய்து, மலை உச்சியில் இருக்கும் அம்மனின் விக்ரகம் உள்ள சிறிய கோவிலுக்கு செல்வார்கள். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபம் ஏற்றப்படும். தீபாவளி அன்று தேவிரம்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம், தீபத்துக்கான நெய், விறகு ஆகியவற்றை காணிக்கையாக வழங்குவார்கள்.

    தீபாவளிக்கு முந்தைய நாள் முதல் தீபாவளி அன்று மாலை வரை மலை உச்சியில் உள்ள கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்தை முடித்து விட்டு மலைஅடிவாரத்தில் உள்ள தேவிரம்மா கோவிலுக்கு வருவார்கள். அங்கு தீபாவளிக்கு அடுத்த நாள் (விழாவின் 3-வது நாள்) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படும். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அப்போது கோவில் கருவறையின் கதவு சாத்தப்பட்டு இருக்கும். அம்மனை தரிசிக்க பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருப்பார்கள்.

    அம்மனுக்கு அலங்காரம் முடிவடைந்தவுடன் பூஜை தொடங்குவதற்காக மேளக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை முழங்குவார்கள். அப்போது சாத்தப்பட்டு இருக்கும் கருவறையின் கதவுகள் அம்மன் அருளால் தானாக திறப்பது அதிசய சம்பவம் ஆகும். இதை காண்பதற்காக கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கால்கடுக்க காத்திருப்பார்கள். கதவுகள் திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனின் அருளை பார்த்து மனம் உருகி வேண்டுவார்கள்.

    தீபாவளி முடிவடைந்த 4-வது நாள் தேவிரம்மா கோவிலில் தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டம் இறங்குவர். 5-வது நாள் அம்மன் பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தேவிரம்மா கோவிலில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×