search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா டிசம்பர் 12-ந் தேதி நடக்கிறது
    X

    சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா டிசம்பர் 12-ந் தேதி நடக்கிறது

    ஆலப்புழை நீரேற்று புரம் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா டிசம்பர் 12-ந்தேதி நடக்கிறது.
    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம், நீரேற்றுபுரம் அருகே சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. ‘பெண்களின் சபரிமலை‘ என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு நடைபெறும் பொங்கல் விழா குறித்து, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி கே.கே.கோபாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி நடைபெறுகிறது.

    விழாவையொட்டி பன்னிரெண்டு நோன்பு, நாரிபூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் ஆகியவை நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 8.30 மணிக்கு பொங்கல் வழிபாடு நடைபெறும்.

    கோவில் முன் அமைக்கப்படும் பிரமாண்ட பொங்கல் அடுப்பில் கோவில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் திருமேனி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். தொடர்ந்து பெண்கள் தாங்கள் கொண்டு வந்த பானைகளில் பொங்கலிடுவார்கள். இந்த ஆண்டு சுமார் 70 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கல் விழாவையொட்டி டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 27- ந் தேதி வரை பன்னிரெண்டு நோன்பு வழிபாடு நடைபெறும். இந்த நாட்களில் பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபாடு நடத்துவார்கள்.

    நாரிபூஜை (பாதபூஜை) டிசம்பர் 16- ந் தேதி நடக்கிறது. டிசம்பர் 26- ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் ஆகியவை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×