search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹாசனாம்பா கோவிலில் 6 நாட்களில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.29.61 லட்சம் வசூல்
    X

    ஹாசனாம்பா கோவிலில் 6 நாட்களில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.29.61 லட்சம் வசூல்

    ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோவிலில் 6 நாட்களில் பக்தர்களிடம் இருந்து சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.29.61 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக துணை கலெக்டர் கூறினார்.
    ஹாசன் டவுன் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் 10 நாட்கள் திறக்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 20-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 1-ந் தேதி வரை கோவில் திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சைத்ரா அறிவித்து இருந்தார்.அதன்படி கோவில் கடந்த 20-ந் தேதி திறக்கப்பட்டது.

    கோவில் திறக்கப்பட்ட நாளில் இருந்து கர்நாடக மாநிலம் மட்டும் அல்லாமல் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகையும், எம்.எல்.சி.யுமான தாரா தனது குடும்பத்தினருடன் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று ஹாசன் மாவட்ட துணை கலெக்டர் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோவில் சக்தி வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் கடந்த 20-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த கோவில் 13 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.300 (ஒரு நபருக்கு) வசூலிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி பக்தர்களிடம் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றுடன் (அதாவது, நேற்று) கோவில் திறந்து 6 நாட்கள் முடிந்து உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த 6 நாட்களில் மட்டும் 9,872 பேர் சிறப்பு கட்டணமாக ரூ.300 செலுத்தி அம்மனை தரிசித்து சென்று உள்ளனர். இதனால் கடந்த 6 நாட்களில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.29.61 லட்சம் வசூல் ஆகியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்து செல்வதால், ஹாசனாம்பா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×