search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வித விதமான தீபாவளி கொண்டாடும் மக்கள்
    X

    வித விதமான தீபாவளி கொண்டாடும் மக்கள்

    இந்தியாவில் மட்டுமல்லாமல், கடல் கடந்தும் கூட தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை அளித்து வந்த நரகாசுரனை, மகாவிஷ்ணு, சத்யபாமையுடன் இணைந்து வதம் செய்தார். இறக்கும் தருவாயில் தான் இறக்கும் நாளை மக்கள் அனைவரும் நல்ல நாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டியதன் படியே தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

    தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து வழிபடுவதற்கு பெயர் ‘தீபாவளி’ ஆகும். ஆவளி என்றால் வரிசை என்று பொருள். இந்தியாவில் மட்டுமல்லாமல், கடல் கடந்தும் கூட தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதிகாச புராணங்களில் விவரிக்கப்படும் தீபாவளி, வரலாற்று ரீதியான தீபாவளி என பல தகவல்கள் தீபாவளி கொண்டாடுவது பற்றி சொல்லப்படுகிறது. அவற்றில் சில தீபாவளிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    ராமாயண தீபாவளி:

    ராவணனை வதம் செய்ததும், ராமபிரான் சீதாராமனாக அயோத்தி வந்து சேர்ந்தார். அவர் அயோத்தி வந்த நேரம் அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளுக்குப் பிறகு ராமரை தரிசிக்க காத்திருந்த அயோத்தி மக்கள், அவரை வரவேற்கும் விதமாக, இரவு நேரத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து காத்திருந்தனர். அதே போல் சீதையும், ராமரும் அரண்மனைக்குள் நுழைந்ததும், அரண்மனை முழுவதும் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தார்கள். அந்த நாளே தீபாவளி என்று போற்றப்படுகிறது.

    வாமன தீபாவளி :

    கருவில் இருக்கும் போத நாராயணரின் நாமத்தைக் கேட்டதன் பயனாக, சிறந்த விஷ்ணு பக்தனாக வளர்ந்தவர் பிரகலாதன். பக்திக்காக தனது தந்தையான இரண்யகசிபுவையே எதிர்த்தவர். அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரகலாதனின் பேரன்தான் மகாபலி சக்கரவர்த்தி. அந்த மகாபலி சக்கரவர்த்தி முடிசூட்டிக் கொண்ட நாளே ‘தீபாவளி’ என்று கொண்டாடுபவர் களும் உண்டு. அன்றைய தினம் ஏற்றப்படும் தீபம் ‘எமதீபம்’ என்று அழைக்கப்படுகிறது. வாமன அவதாரம் எடுத்த நாராயணர், மகாபலிக்கு அருள்புரிந்து அவருக்கு ஞான திருவ(மு)டி சூட்டிய நாள் தீபாவளி என்பவர்களும் உண்டு.

    சீக்கிய தீபாவளி :

    ஜஹாங்கீர் என்ற மன்னன் 52 ராஜபுத்திர அரசர் களையும், சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் என்பவரையும் சிறையில் அடைத்தான். ஆனால் குரு கோவிந்தசிங் தன்னுடைய தனித் திறமையால், சிறையில் இருந்து தப்பினார். தன்னுடன் இருந்த ராஜபுத்திர அரசர்கள் 52 பேரையும் தப்பிக்க வைத்தார். சிறையில் இருந்து மீண்டு வந்த அனைவருக்கும், ஏராளமான தீபங்களை ஏற்றிவைத்து பொற்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்தனர். அந்த நாள்தான் தீபாவளி என்று கூறப்படுகிறது.

    ஜைன தீபாவளி :

    ஜைன மதத்தவர்களின் குருவான வர்த்தமான மகாவீரர் முக்தி அடைந்த நாளே தீபாவளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஞான ஒளியான மகாவீரர் மறைந்த தினத்தில், தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள்.

    தாய்லாந்து தீபாவளி :

    ‘லாய் கரடாங்க்’ இது தான் தாய்லாந்தில் கொண்டாடப்படும் தீபாவளியின் பெயர். அன்றைய தினம் வாழை இலையால் செய்யப்பட்ட இலைக் கிண்ணத்தில் ஒரு மெழுகுவர்த்தியையும், ஊதுவத்தியையும் ஏற்றிவைத்து, அத்துடன் ரூபாய் நோட்டுகளையும் போட்டு நீரில் மிதக்க விடுவார்கள். மக்களின் வாழ்வில் ஒளியும், மணமும் வீசுவதுடன், செல்வமும் சேர வேண்டும் என்பது இந்த விழாவின் நோக்கமாகும்.

    சீனத் தீபாவளி :

    சீனாவில் கொண்டாடப்படும் தீபாவளியில் கூட தீபங்களே முதன்மை பெறுகின்றன. அவர்கள் தீபாவளி அன்று விளக்குகளை வரிசையாக ஏற்றிவைப்பதோடு, தங்களின் வீட்டுக் கதவுகளில் ‘நன்றாக வாழ்’, ‘வளமை பெருகட்டும்’ என்பது போன்ற நல்ல வாசகங்களை எழுதி வைக்கிறார்கள். சீனாவில் நடை பெறும் தீபாவளி தினத்தன்றுதான், அங்குள்ளவர்கள் புதுக்கணக்கு தொடங்குகிறார்கள் என்பது சிறப்புத் தகவல்.

    ஜப்பான் தீபாவளி:

    தீபாவளியை ஜப்பானிய மொழியில் ‘டோரோனாகாஷி’ என்று அழைக்கிறார்கள். முன்னோர்களை வழிபடும் விழாவாகவும், அவர்களின் ஆசியைப் பெறும் விழாவாகவும், இதனை ஜப்பான் நாட்டினர் கொண்டாடுகின்றனர். விளக்குகளை ஏற்றி வைத்து முன்னோர்களை வரவேற்கும் வழிபாடு இது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட தீபாவளி ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது.
    Next Story
    ×