search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை திறப்பு
    X

    ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை திறப்பு

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை நேற்று காலை திறக்கப்பட்டது.
    ஹாசன் டவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். மற்ற நாட்களில் கோவில் மூடப்பட்டு இருக்கும். கோவில் நடை திறக்கப்படும் போது அம்மனை தரிசிப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.

    மேலும் நடிகர்கள், நடிகைகள், அரசியல் கட்சியின் தலைவர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20-ந் தேதி (நேற்று) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை 13 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்று மாவட்ட கலெக்டர் சைத்ரா அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதைதொடர்ந்து ஹாசனாம்பா சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சைத்ரா கலந்துகொண்டு கோவில் நடையை திறந்து வைத்து சாமி தரிசனம் செய்தார். மேலும் இந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் சைத்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளி பண்டிகையையொட்டி திறக்கப்படுவது வழக்கம். அதேப்போன்று இந்த ஆண்டும் இன்று (அதாவது நேற்று) கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம்(நவம்பர்) 1-ந் தேதி வரை நடை திறந்து இருக்கும். கோவில் நடை திறக்கப்பட்டதும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகிற நாட்களில் மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்களின் கூட்டநெரிசலை தவிர்க்கும் விதமாக ரூ.35 லட்சம் செலவில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சிக்கமகளூரு, மைசூரு, சிவமொக்கா, அரிசிகெரே, பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காத வண்ணம் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், 21 சப்-இன்ஸ்பெக்டர்கள், 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×