search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சின்ன திருப்பதி கோவில் தேரோட்டம்
    X

    சின்ன திருப்பதி கோவில் தேரோட்டம்

    சேலம் அடுத்துள்ள சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோவில் உள்ளது. சுமார் ஆயிரமாண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரட்டாசி மாதம் முழுக்க சிறப்பான பூஜைகள், அபிசேகம், ஆராதனை போன்றவை நடத்தபடும். அதேபோன்று ஒவ்வொரு சனிக்கிழமையும் விஷேச நாட்களாக கருதப்பட்டு கடந்த நான்கு வாரம் சனிகிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிலையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வெங்கட்டரமண சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரம் செய்து அமர்த்தப்பட்டார். இதையடுத்து பல்வேறு வகையிலான பூஜைகள் செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவிந்தா கோவிந்தா கோசம் முழங்கவும், சென்ட மேளம் முழங்கவும் தேர் இழுக்கப்பட்டது.

    மேலும், மாணவ மாணவிகளின் கோலாட்டம், நடனம், வாத்தியங்கள் என தேர் முன்பாக பல்வகை பக்தி நிகழ்சிகள் நடப்பதை பார்த்தவாறே சுவாமிகள் கோவிலை சுற்றி தேரில் வலம் வந்தார்.

    ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையற்கரசி உள்பட ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் ஓமலூர் டி.எஸ்.பி திருமால்அழகு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×