search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தலாமா?
    X

    கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தலாமா?

    கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தலாமா என்பதை பற்றி கீழே பார்க்கலாம்.
    ருத்ராட்சம் என்று கேட்டாலே நம் நினைவுக்கு வரும் கடவுள் சிவபெருமான். ருத்ராட்சம் அதிகம் அணிந்து கொண்டிருக்கும் கடவுள் இவர். ருத்ரன் என்ற பெயர் கொண்ட கடவுளும் இவர்தான். சிவபெருமான் போலவே, விநாயகர், அம்பாள், திருமால் (மகாவிஷ்ணு), பிரம்மதேவன், காலபைரவர், சூரியதேவன், சந்திரதேவன், செவ்வாய் தேவன், சுக்கிரதேவன், வாயுதேவன் என்போரும் ருத்ராட்சம் அணிந்து உள்ளனர் என்று ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு செய்தி கூறப்பட்டுள்ளன.

    ருத்ராட்சத்தை மனிதர்கள் எல்லோரும் அணியலாம். ஆனால் கட்டுப்பாட்டோடு இருப்பதுதான் மிகவும் அவசியம். ஆண்கள் ஒரு ருத்ராட்சமோ அல்லது மாலையாகவோ அணிந்திருந்தால் இவர்கள் தீட்டு இடங்களுக்கோ, இல்லத்திற்கோ செல்லக்கூடாது. தீட்டு ஆனவர் கைகளால் உணவு அருந்தக் கூடாது. அப்படி ஏதேனும் அறியாமல் நடந்து விட்டால் ருத்ராட்சத்தை தூய்மை செய்து பின்பு அணிந்தால் அது அதிக நன்மை தரும்.

    பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தால் இரவில் கழற்றி பூஜை அறையில் வைத்து காலையில் குளித்தவுடன் அணியலாம். மாதவிடாய் காலங்களில் ருத்ராட்சத்தை தொடுவதோ அணிவதோ கூடாது. குழந்தைகள் எப்போதும் அணிந்திருக்கலாம். குழந்தைகள் ருத்ராட்சம் அணிந்தால் ஜீரணம் சரியாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கல்வியை சிறந்த முறையில் பயில்வார்கள்.
    ருத்ராட்சம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் அமைப்பை கொண்டதாகும். ஒன்று முதல் 25 முகம் வரை அமைப்பு உடையதாக உள்ளது.

    ஒவ்வொரு முகம் கொண்ட ருத்ராட்சம் ஒவ்வொரு நவகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டு செயல்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் எந்த கிரகம் 6, 8, 12-ல் மறைகிறதோ எந்த கிரகம் நீச்சம், பகை பெறுகிறதோ அதற்கு ஏற்பத்தான் நோயும், வாழ்க்கையில் முன்னேற்ற தடையும் வரும். இவைகளை சரி செய்ய ஜாதகத்திற்கு ஏற்ப, நோய்க்கு ஏற்ப, வாஸ்து தோஷத்திற்கு ஏற்ப எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டே அணிதல், அதிக நன்மை தரும்.

    ருத்ராட்சம் என்பது இயற்கை பொருளாக இருந்தால் தான் பயன் தரும். செயற்கை பொருளாக இருந்தால் பயன் தராது. ருத்ராட்சம் செயற்கை பொருளாகவும் கிடைக்கிறது. அதாவது மரத்தூள் + ரப்பர் (பிளாஸ்டிக்) + ரசாயன பொருளுடனான செயற்கை ருத்ராட்சம் எந்த நல்ல பயன்களும் தராது. இதை அணியவும் கூடாது. இயற்கையான ருத்ராட்சத்தை மட்டும் அணிய வேண்டும். இதுதான் ஆன்மீக பயன் மற்றும் மருத்துவ பயன், ஜோதிட பயன்களையும் தரும்.

    மனிதனின் உடலில் இயங்குகின்ற 7 முதன்மை சக்கரங்களில் எந்த சக்கரம் மிக குறைவாக இயங்குகிறதோ. அந்த சக்கரத்திற்கு ஏற்ற முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம். சக்தியின்றி இயங்கிய சக்கரம் தூண்டி விட்ட பிறகும் சக்தி குறைந்து காணப்பட்டால் அந்த சக்கரத்திற்கு உரிய முகம் கொண்ட ருத்ராட்சம் அணிந்தால் அந்த சக்கரம் சரியான நிலையில் இருக்கும்.

    ருத்ராட்சத்தை மாலையாக அணிபவர்கள் 54 எண்ணிக்கை கொண்டதாகவும், 108 எண்ணிக்கை கொண்டதாகவும் அணிய வேண்டும். ஜெபம் செய்யும் போது கையில் வைத்து இருக்கும் மாலையின் எணணிக்கை 27+1, 36+1, 54+1, 108+1 என்ற அடிப்படையில் தான் ருத்ராட்ச மணிகள் சேர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட முகம் கொண்ட ருத்ராட்சமோ, ருத்ராட்ச மாலையையோ இடது கையால் தொடவும் எடுக்கவும் கூடாது.

    அதே போல ஜெப ருத்ராட்ச மாலைகளை பிறர் தொடவும் அனுமதிக்க கூடாது. பிறருக்கு தரவும் கூடாது. ஒரு குறிப்பிட்ட முகம் கொண்ட ருத்ராட்சம் யார் எந்த இடத்தில் அணியலாம் என்று அவர்களின் ஜனன ஜாதகத்தை வைத்து தான் கூற முடியும். ஜெபம் செய்யும் ருத்ராட்ச மாலைகளை கழுத்தில் அணிய கூடாது.

    கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தக் கூடாது. ருத்ராட்சத்தை தூய்மை செய்து அந்த முகத்திற்கு ஏற்ற மந்திரம் சொல்லி உருவேற்றிய பிறகுதான் அணிய வேண்டும். அணிந்த பிறகு சோமவாரம் என்று சொல்லக் கூடிய திங்கள்தோறும் சிவ ஆலயம் சென்று சிவபெருமானை வழிபடவும். இவ்வாறு வழிபாடு செய்தால் உடல் தேக ஆரோக்கியம், முகம் பொலிவு, வாழ்க்கை முன்னேற்றம், மன அமைதி உண்டாகும்.

    ருத்ராட்சம் அணிவதால் தீரும் நோய்கள் :

    கண், மூக்கு, தொண்டை, காது நோய்கள். மூளைக் கோளாறு, இருதயக் கோளாறு, நுரையீரல் கோளாறு, ஞாபக மறதி, நரம்புக் கோளாறு, ஆண் மலட்டுத்தன்மை, தைராய்டு சுரப்பிக் கோளாறு, ரத்த அழுத்தம், சளி தொந்தரவு, கல்லீரல் நோய், நீரிழிவு நோய், கருப்பைப் கோளாறு, சிறுநீரக நோய், தூக்கமின்மை, அஜீரணம், எலும்பு நோய், மூட்டு வலி, பக்கவாதம், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல், வலிப்பு நோய், தீராத வயிற்று வலி, தோல் நோய், திக்குவாய், உடல் பலவீனம் மற்றும் பல வகையான நோய்களுக்கும் எந்த முகம் கொண்ட ருத்ராட்சம் என அறிந்து அதற்கு ஏற்ற ருத்ராட்சம் அணிந்தால் விரைவில் பயன்தரும்.

    பெண்களுக்கு என்ன பலன்?

    பெண்கள் ருத்ராட்சத்தை அணிந்தால் மாதவிடாய் மாதந்தோறும் சரியான முறையில் நடைபெறும். நல்ல சிந்தனைகள் மேலோங்கும். தீய சக்திகள் எதுவும் இவர்களிடம் நெருங்காது. ஆண்கள் ருத்ராட்சம் அணிந்தால் தர்ம சிந்தனைகள் மேலோங்கும். தொழில், வியாபாரம் என வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். ருத்ராட்சம் அணிவதால் உடலில் உள்ள நோய்களும் நாளடைவில் குணம் அடையும்.
    Next Story
    ×