search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மறந்து விட்டதை மகாளயத்தில் விடு
    X

    மறந்து விட்டதை மகாளயத்தில் விடு

    புரட்டாசி மாதத்தில்தான் மகாளய அமாவாசை (நாளை) வருகிறது. அன்று பித்ருக்களான நமது மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது விசேஷம்.
    புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் மகாளய அமாவாசை (நாளை) வருகிறது. அன்று பித்ருக்களான நமது மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது விசேஷம். மகாளய பட்சம் என்பது 15 நாட்கள் ஆகும். இது புரட்டாசி மாதம் பவுர்ணமி திதியில் தொடங்கி அமாவாசையில் நிறைவு பெறுகிறது. ‘மறந்து விட்டதை மகாளயத்தில் விடு’ என்பது பழமொழி. நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    மரணமடைந்த நமது முன்னோர்களின் ஆவியானது, ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூமியில் சுற்றிக்கொண்டு இருக்குமாம். பின்னர் விண்ணுலகம் நோக்கி செல்லும். பித்ருக்கள் உலகம் என்று ஒன்று உள்ளது. இது சூரிய, சந்திர மண்டலத்திற்கும் அப்பால் உள்ளது. சொர்க்கலோகம் போன்று காட்சியளிக்கும். அங்கு பித்ருக்கள், ஆதி என்பவர் கட்டுப்பாட்டில் வசிக்கின்றனர். அனைத்து வசதிகள் அங்கு இருந்த போதிலும் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை தாங்களே எடுத்துக் கொள்ள முடியாது. 

    தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு சேர்த்து வைத்த சொத்துக்களுக்கு கைமாறு தர வேண்டும் என அவர்கள் கேட்டனர். பித்ருக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன் வந்த எமதர்மராஜன், அவர்களுக்கு 15 நாட்கள் விடுப்பு கொடுத்து பிள்ளைகளிடம் வேண்டியதை பெற்றுக்கொள்ளும்படி கூறி பூமிக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக்காலம் மகாளய பட்சம்.

    இந்த நாட்களில் நமது மூதாதையர்கள் அவரவர் உறவினர்கள் வீட்டுக்கு வந்து வாசலில் நிற்பார்களாம். அந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களை திருப்தி செய்ய வேண்டும். மகாளயபட்சம் வரும் நாட்களில் அமாவாசையன்று ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற தண்ணீரை, ஸ்வேதாதேவி என்பவள் இறந்து போன நமது மூதாதையர்களின் கையில் சேர்த்து விடுகிறாள்.

    நமது வீட்டு வாசல் முன்பு நிற்கும் பித்ருக்களுக்கு எள் தர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும். பித்ருக்களின் ஆசீர்வாதம் நமது குலத்தைக் காக்கும் என்பார்கள். அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களை திருப்தி செய்ய வேண்டும். மகாளய பட்சக் காலத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை, குளக்கரைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்வதால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நேரடியாக நாம் வழங்குவதை பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவார்கள். 

    தேவர்களின் வருடக் கணக்குப்படி அவர்களுக்கு புரட்டாசி மாதம் நடுராத்திரி வேளையாகும். இந்த நேரத்தில் அமைதியாக இருக்கும், நிசப்தம் நிலவும். எனவே தேவர்களை ஆராதிப்பதற்கும், பித்ருக்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படுகிறது.
    Next Story
    ×