search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடியில் இருந்தபடியே தொலைதூர பக்தர்களுக்கு உதவி செய்த சாய்பாபா
    X

    சீரடியில் இருந்தபடியே தொலைதூர பக்தர்களுக்கு உதவி செய்த சாய்பாபா

    சீரடி சாய்பாபா வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    சீரடி சாய்பாபா, தன் பக்தர்களுடன் மூன்று விதமான வழிகளில் தொடர்பு கொண்டிருந்தார். பாபாவின் பக்தர்கள், தங்களுக்கு எப்போது, என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், அடுத்த வினாடியே சாய்நாதரின் மூல மந்திரமான ‘‘ஓம் சாய் ஸ்ரீசாய், ஜெய ஜெய சாய்’’ என்று உச்சரிப்பார்கள். சாய்நாதரிடம் மனம் உருகி தம் பிரச்சினையைத் தீர்த்து அருளுமாறு வேண்டுவார்கள். 

    இந்த பிரார்த்தனையை கேட்ட மாத்திரத்திலேயே பாபா தன் பக்தன் ஆறுதல் பெறுவதற்குரிய வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பார். பக்தனை சீரடி தலத்துக்கு வரவழைத்து ஆசீர்வாதம் செய்வது பாபாவின் முதல் வழியாகும். 

    இரண்டாவது வழி, சீரடியில் இருந்தபடியே அவர் உலகின் எந்த மூலையில் உள்ள பக்தனுக்கும் உதவி செய்வதாகும். சாய்நாதா..... என்று மனம் உருகி பிரார்த்தனை செய்பவர்களுக்கு தனக்குப் பதில் யாராவது ஒருவரை அனுப்பி வைத்து உதவுவார். 

    சில சமயம் சீரடி மசூதியில் இருந்தபடியே தொலை தூரத்தில் உள்ள தம் பக்தனுக்கு உதவி செய்வார். நிறைய தடவை அந்த அற்புதத்தை அவர் நிகழ்த்தி உள்ளார். மூன்றாவதாக தம் பக்தன் ஆழ்ந்த தூக்கம், அல்லது சூழ்நிலை தியானத்தில் இருக்கும் போது, பாபா அவர் கனவில் தோன்றி உதவிகள் செய்வார். 

    இப்படி மூன்று விதமான வழிகளில் ஏதாவது ஒன்று மூலம் பாபா நிச்சயமாக உதவி செய்வார். இந்த பகுதியில் நாம் பாபா, சீரடி மசூதியில் இருந்தபடியே தொலை தூரத்தில் உள்ள தம் பக்தர்களுக்கு உதவிய ஆச்சரிய நிகழ்வுகளைக் காணலாம். பாபாவின் தீவிர பக்தர்களில் நானா சந்துர்கர் என்பவரும் ஒருவர். ஒரு தடவை கர்ப்பிணியாக இருந்த அவர் மகள் பிரசவ வலியால் துடித்தார். நீண்ட நேரமாக குழந்தை பிறக்கவில்லை. 

    வேதனை அடைந்த நானா, பாபாவை நினைத்து மனம் உருக வழிபட்டார். அதே சமயத்தில் சீரடியில் இருந்த பாபா இதை உணர்ந்தார். அப்போது ராம்கிரிபுவா என்ற பக்தர், பாபாவிடம் வந்து ‘‘நான் ஊருக்குப் புறப்படுகிறேன். உத்தரவு கொடுங்கள்’’ என்றார். உடனே பாபா, ‘‘சரி’’ என்று கூறியபடி சிறிது உதியை எடுத்துப் பொட்டலமாக கட்டி ராம்கிரிபுவாவிடம் கொடுத்தார். ‘‘இதை ஜாம்நகரில் உள்ள நானாவிடம் கொடுத்து விடுங்கள் என்றார். 

    அதற்கு ராம்கிரி புவா, ‘‘பாவா நான் ஜலகான் வரை செல்லவே ரெயிலில் டிக்கெட் எடுத்து இருக்கிறேன்’’ என்றார். ஆனாலும் பாபா அவரை விடவில்லை. 

    அவர் சிரித்தப்படியே புவாவிடம், ‘‘ஜலகான் ரெயில் நிலையத்தில் இருந்து நீ வெளியில் வந்ததும், ஒரு குதிரை வண்டி தயாராக நிற்கும். அதில் ஏறி நீ செல்லலாம்’’ என்றார். 

    ராம்கிரி புவாவுக்கு எதுவும் புரியவில்லை. என்றாலும் சரி என்று கூறியபடி பாபாவிடம் இருந்து உதிப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். நள்ளிரவில் ஜலகான் ரெயில் நிலையத்தில் போய் இறங்கினார். 

    வெளியில் வந்தார். யாருமே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. அந்த ஊர். ‘‘அடுத்து என்ன செய்வது?’’ என்று புவா யோசித்த மறுவினாடி ஜல்... ஜல் ஒலியுடன் குதிரை வண்டி வந்து நின்றது. 

    ‘‘நீங்கதான் ராம்கிரி புவாவா? ஜாம்நகரில் உள்ள நானா உங்களை அழைத்து வர அனுப்பி வைத்தார்’’ என்றார். ராம்கிரி புவா ஏறி அமர்ந்ததும், குதிரை வண்டி புறப்பட்டது. குதிரை சிட்டாகப் பறந்தது. வழியில் ஒரு இடத்தில் ‘‘நானா கொடுத்து அனுப்பினார்’’ என்று உணவுப் பொட்டலத்தை வண்டியோட்டி கொடுத்தார். 

    அந்த உணவு ராம்கிரி புவாவுக்கு தேவாமிர்தமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு சற்று கண் அயர்ந்தார். அதிகாலை குதிரை வண்டி ஜாம்நகர் போய் சேர்ந்தது. 

    நானாவை சந்தித்த ராம்கிரி புவா, தன் கையில் இருந்த உதிப் பொட்டலத்தை எடுத்து நீட்டி, ‘‘உங்களிடம் பாபா தரச் சொன்னார்’’ என்று கொடுத்தார். ஆச்சரியம் அடைந்த நானா, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தப்படி அந்த உதியை தண்ணீரில் கலந்து, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த தம் மகளுக்கு கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் நானா மகளுக்கு அழகான குழந்தை பிறந்தது. 

    கண்ணீர் மல்க வந்த நானா, ராம்கிரி புவா கையைப் பிடித்துக் கொண்டு, நன்றி தெரிவித்தார். அதற்கு ராம்கிரி புவா, ‘‘எனக்கு ஏன் நன்றி சொல்கிறீர்கள். நீங்கள் குதிரை வண்டி அனுப்பா விட்டால் நான் எப்படி இங்கு வந்திருப்பேன்’’ என்றார். 

    அதிர்ச்சி அடைந்த நானா, ‘‘நான் குதிரை வண்டி எதுவும் அனுப்பவில்லையே.... நீங்கள் இங்கு வருவதே எனக்குத் தெரியாதே’’ என்றார். உடனே ராம்கிரி புவா வெளியில் ஓடி வந்து எட்டிப் பார்த்தார். குதிரை வண்டியும் இல்லை. வண்டியை ஓட்டி வந்தவனையும் காணவில்லை. அதன் பிறகே அது பாபா நடத்திய அற்புதம் என்பதை நானா, ராம்கிரி புவா இருவரும் உணர்ந்து சிலிர்த்தனர். 

    குதிரை வண்டிக்காரன் எப்படி வந்தான்? எங்கு சென்றான்? அது பாபாவுக்கு மட்டுமே தெரிந்த அற்புதம். இந்த அற்புதத்தை எண்ணி நானா, ராம்கிரி புவா இருவரும் சீரடி திசை நோக்கி கும்பிட்டனர். 1910-ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் ஒரு நாள்.... துவாகரமாயி மசூதியில் சாய்பாபா வழக்கம் போல துனியாகக் குண்டம் அமர்ந்திருந்தார். திடீரென யாரும் எதிர்பாராத வகையில் யாக குண்டத்தின் நெருப்புக்குள் தன் கையை நுழைத்தார். 

    பக்தர்கள் பதறினார்கள். கூச்சலிட்டனர். சில பக்தர்கள் ஓடிச் சென்று யாக குண்ட தீக்குள் இருந்து பாபா கையை வெளியில் இழுத்தனர். அதற்குள் பாபா கை தீயில் எரிந்து கொப்பளமான காயமாகி விட்டது. அவசரம், அவசரமாக பாபாவின் தீ காயம்பட்ட கைக்கு முதல்-உதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் பாபா முகத்தில் எந்த சலனமும் இல்லை. வேதனைக்கான அறிகுறிகளும் இல்லை. அவர் தன் கை கொப்பளமாகி விட்டது பற்றி எந்த கவலையும் இல்லாமல் அமைதியாக இருந்தார். 

    ஒரு பக்தர் அவரிடம், ‘‘ஏன்... பாபா, இப்படி செய்து விட்டீர்கள்? இதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டார். அதற்கு பாபா, ‘‘தொலை தூரத்தில் என் பக்தன் ஒருவனது குழந்தை தீக்குள் விழுந்தது. அதைத் தடுத்து நிறுத்தினேன்’’ என்றார். இதைக் கேட்ட பக்தர்களுக்கு எதுவும் புரியவில்லை. பாபா சொல்வதை சில பக்தர்கள் நம்ப முடியாமல் திகைத்தனர். 

    இந்த சம்பவம் நடந்த இரு தினங்கள் கழித்து அந்த கொல்லனின் மனைவி பாபாவை பார்க்க வந்தாள். அவள் அங்கிருந்த பக்தர்களிடம் பேசுகையில், ‘‘என் குழந்தையை இடுப்பில் வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணவர் திடீரென அழைத்த போது அவசரமாக எழுந்ததால் குழந்தை தீக்குள் விழுந்து விட்டது. எப்படியோ பாபா அருளால் என் குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது’’ என்றாள். 

    அவள் இவ்வாறு சொன்ன பிறகே, யாக குண்டத்துக்குள் பாபா கை விட்டு குழந்தையை காப்பாற்றிய விஷயம் அனைவரது மத்தியிலும் உறுதியானது. இந்த அற்புதம் பாபா எங்கும் நிறைந்து இருக்கிறார் என்ற நம்பிக்கையை பக்தர்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தது. 

    மற்றொரு தடவை முதல் உலகப் போர் நடந்த சமயம்.... இந்திய கடற்படை தளபதியாக இருந்த கைகன்சிரி தருவாலாவும் போரில் பங்கேற்றார்.

    அவருடன் சென்ற கப்பல்கள் அனைத்தையும் எதிரி நாட்டு விமானங்கள் குண்டு வீசி அழித்து கடலில் மூழ்க செய்து விட்டன. அடுத்து தன் கப்பல் மீதும் குண்டு வீசப்படும் என்று தருவாலாவுக்கு தெரிய வந்தது. அந்த கப்பலில் இருந்த அனைவரும் மரண பீதியில் அழுதனர். ஆனால் தருவாலா மனம் கலங்கவில்லை. சாய்நாதரை கண் கண்ட தெய்வமாக வழிபட்டு வந்த அவர் நம்பிக்கையோடு பாபா படத்தை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்தார். 

    பாபாவின் கண்களை உன்னிப்பாகப் பார்த்தப்படி, ‘‘எங்களை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். காப்பாற்றுங்கள் பாபா’’ என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரடி மசூதியில் அப்போது பக்தர்களிடம் பேசிக் கொண்டிருந்த சாய்பாபா திடீரென அலறியபடி கீழே விழுந்தார். அனைவரும் ஓடோடி வந்து பாபாவை தூக்கினார்கள். 

    பாபா சட்டையில் இருந்து தண்ணீர் வழிந்தது. அவர் தலை, உடல் அனைத்தும் தொப்பலாக நனைந்திருந்தது. ஏதோ தண்ணீருக்குள் மூழ்கி எழுந்தவர் போல பாபா காணப்பட்டார். அவர் இருந்த இடத்தில் தண்ணீர் வழிந்தோடி சிறு குளம் போல தேங்கி விட்டது. இதைப் பார்த்து பக்தர்கள் எல்லாரும் ஆச்சரியம் அடைந்தனர். ‘‘என்ன நடந்தது. பாபா’’ என்று கேட்டார். 

    அப்போது ‘‘அவர் 3 கப்பல்களையும் காப்பாற்றி விட்டேன்’’ என்றார். வேறு எதுவும் அவர் சொல்லவில்லை. இதனால் சீரடியில் இருந்த யாருக்கும் அவர் சொன்னது புரியவில்லை. 

    3 நாள் கழித்து மசூதிக்கு ஒரு தந்தி வந்தது. தளபதி தருவாலா அதை அனுப்பியிருந்தார். ‘‘பாபா உங்கள் அருளால் 3 கப்பல்களில் இருந்த நாங்கள் குண்டு வீச்சில் சிக்காமல் தப்பி விட்டோம். உங்களுக்கு கோடான கோடி நன்றி’’ என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

    அதன் பிறகே தொலை தூரத்தில் கடலுக்குள் தளபதி தருவாலாவை பாபா காப்பாற்றி இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வந்தது. எத்தனை மைல் தொலைவில் இருந்தாலும் பாபா நம்மை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார் என்பதை இந்த அற்புதம் உறுதிபடுத்தியது. 

    இது போன்ற மேலும் சில அற்புதங்களை அடுத்த வாரம் வியாழக்கிழமை பார்க்கலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×