search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    கள்ளக்குறிச்சி பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 22 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தில்லை கோவிந்தராஜ பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சங்கராபுரம் மணிநதிக்கரை அருகே உள்ள அலமேலுமங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் காலை 7 மணிக்கு வேத கோஷங்கள் முழங்க பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் தேவபாண்டலம் பார்த்தசாரதி பெருமாள் கோவில், விரியூர் வேணுகோபால்சாமி கோவில், குளத்தூர் லட்சுமி நாராயணபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    தியாகதுருகம்

    தியாகதுருகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு திருமஞ்சனமும், பகல் 11.50 மணிக்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் சீதேவி பூதேவியுடன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    Next Story
    ×