search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் அக்டோபர் 1-ந் தேதி புறப்படுகிறது
    X

    சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் அக்டோபர் 1-ந் தேதி புறப்படுகிறது

    திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து அக்டோபர் 1-ந் தேதி புறப்படுகிறது என ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்துள்ளார்.
    திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி, ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, மற்றொன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக சமர்ப்பிக்கப்படும் பாரம்பரியமிக்க திருக்குடைகள்.

    திருக்குடைகள் சமர்ப்பணம் குறித்து இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடம் எல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.

    சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் அக்டோபர் 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.31 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க உள்ளது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.

    பின்னர் சால்ட் கொட்டகை(நடராஜா தியேட்டர்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டாரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது.

    அக்டோபர் 2-ந் தேதி ஐ.சி.எப், ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது. 3-ந் தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது. 4-ந் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப் பெருமாள் கோவில், திருவள்ளூர் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது. 5-ந் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து, 6-ந் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்த்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படு கிறது.

    திருப்பதிக் திருக்குடை ஊர்வலம் செல்லும் வழி எங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப்பெற குடும்பத்துடன் வாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    Next Story
    ×