search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கடையூர் அமிர்தகடேசுவரை சிறப்புகள் 50
    X

    திருக்கடையூர் அமிர்தகடேசுவரை சிறப்புகள் 50

    திருக்கடையூர் அமிர்தகடேசுவரை பற்றிய 50 சிறப்பு தகவல்களை கீழே பார்க்கலாம்.
    1. திருக்கடையூர் அமிர்தகடேசுவரை அமிர்தலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

    2. அமிர்தகடேசுவரர் மூலவராகவும் எமனை உதைத்து சம்ஹாரம் செய்த கால சம்ஹாரமூர்த்தி உற்சவராகவும் உள்ளனர்.

    3. மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக்கயிறு அமிர்தகடேசுவரர் மீதும் பட்டது. அந்த தடம் இப்போதும் லிங்கத் தின் உச்சியில் உள்ளது. மூலவருக்கு பாலாபிஷேகம் செய்யும் போது அந்த வடு தெளிவாக தெரியும்.

    4. சுயம்பு மூர்த்தியாக உள்ள இத்தலத்து மூலவர் ஒரு லிங்கம் தான் என்றாலும் அதை உற்றுப்பார்க்கும் போது பின்னால், இன்னொரு லிங்கம் பிம்பமாகத் தெரியும்.

    5. அமிர்தகடேசுரர் இங்குள்ள வில்வவனத்தில் சுயம்பு மூர்த்தியாக உறைந்து இருப்பதை சோழ மன்னர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்து ஆலயம் கட்டினார்கள்.

    6. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலத்து ஈசன் 110- வது இடத்தில் உள்ளார்.

    7. உற்சவர் காலசம்ஹார மூர்த்தியை வழிபட எம பயம் நீங்கும்.

    8. அமிர்த கடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி உண்டாகும். தொழில் விருத்தி, பதவி உயர்வு கிடைக்கும்.

    9. தினமும் சாயரட்சை பூஜை நடக்கும் போது மட்டும் ஆதி வில்வநாதருக்கு முதல் பூஜை செய்கிறார்கள். அந்த சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேசுவரருக்கு அபிஷேகதீர்த்தம் எடுக்க சென்ற குகைபாதை உள்ளதாகச் சொல்கிறார்கள். 

    10. ஏராளமான சித்தர்கள் இங்கு வந்து அமிர்தகடேஸ்வரை வழிபட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.

    11. இத்தலத்து கால சம்ஹார மூர்த்தியை திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடல்களில் 134 இடங்களில் பாடி இருக்கிறார்.

    12. மேற்கே பார்த்த சிவாலயங்கள் மிக, மிக சக்தி வாய்ந்தவை என்பார்கள். திருக்கடையூரிலும் ஈசன் மேற்கு பார்த்த திசையில் தான் உள்ளார்.

    13. திருக்கடையூர் மயானக் கோவிலுக்கு அருகில் காசி தீர்த்தம் எனும் கிணறு உள்ளது. தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து தான் தண்ணீர் கொண்டு மரகத லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

    14. இத்தலத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.

    15. அமிர்தகடேசுவரருக்கும், கால சம்ஹாரமூர்த்திக்கும், அன்னை அபிராமிக்கும் காரண, காமிக, ஆகம விதிமுறைகள் படி நித்திய பூஜை நடத்தப்படுகிறது.

    16. அமிர்கடேசுவரரை வணங்க வருபவர்கள் அவருக்கு மட்டுமின்றி கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமிக்கும் அர்ச்சனை செய்ய தேங்காய் தட்டுகள் வாங்கி வருவது வழக்கமாக உள்ளது. இதற்காகவே திருக்கடையூரில் உள்ள கடைகளில் அர்ச்சனை தட்டுகளில் தலா 3 தேங்காய்கள் வைத்தே விற்பனை செய்கிறார்கள்.

    17. திருக்கடையூர் புறநகரில் தமிழக அரசு ரூ. 2 கோடி செலவில் மிகப்பெரிய தங்கும் விடுதியை கட்டி வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் ஏராளமான பக்தர்கள் பயன்பெறுவார்கள்.

    18. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இலங்கை, பர்மா, இந்தோனேசியா, மலேசியா உள்பட தமிழர்கள் வாழும் நாடுகளில் அமிர்தலிங்கம் என்ற பெயர் பரவலாக உள்ளது. இந்த பெயர் இந்த தலத்தின் ஈசனை வைத்தே பரவியதாக சொல்கிறார்கள்.

    19. இத்தலத்தின் 2-வது பிரகாரத்தில் ரூ. 1 கோடி செலவில் பெரிய மண்டபம் கட்டி வருகிறார்கள். அந்த பணி முடிந்ததும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை அந்த மண்டபத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதனால் முதல் பிரகாரத்தில் பக்தர்கள் குவிவது குறையும். அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் மற்ற சாதாரண பக்தர்கள் ஈசனை வழிபட்டு செல்ல தங்கு தடையற்ற சூழ்நிலை உருவாகும்.

    20. இத்தலம் தருமை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஆதீனம் சார்பில் ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    21. திருக்கடையூர் திருத்தலம் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழித் தடத்தில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    22. கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாப விமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் என்பது உள்பட திருக்கடையூருக்கு பல புராதண பெயர்கள் உண்டு.

    23. மார்க்கண்டேயருக்காக இத்தலத்து ஈசன், எமனை உதைத்து தள்ளியதால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    24. பிரம்மன் இத்தலத்தில் உபதேசம் பெற்றார்.

    25. ஆதியில் இத்தலத்தின் தல விருட்சமாக வில்வம் இருந்தது. தற்போது மார்க்கண்டேயரால் நடப்பட்ட பிஞ்சில மரம் (சாதி மல்லிப் பூ மரம்) தல விருட்சமாக உள்ளது.

    26. இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

    27. திருமால், பிரம்மன், மார்க்கண்டேயர், அகத்தியர், எமன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    28. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.

    29. குங்குலிய கலய நாயனார், காரி நாயனார் இருவரும் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள், சேவைகள், திருப்பணிகள் செய்தனர்.

    30. அப்பர், சுந்தரர் இருவரும் ஒரு சேர எழுந்தருளி, இறைவனை தொழுது குங்கிலிய நாயனாரின் திருமடத்தில் தங்கி இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.

    31. மார்க்கண்டேயர் இறையருள் பெற்ற 108 தலங்களில் இது 108வது தலமாகும். அமிர்தகடேசுவரரை கண்ட பிறகு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.

    32. பூமாதேவி இத்தலத்தில்தான் முழுமையான அனுக்ரகம் பெற்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    33. சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம், உக்ரக சாந்தி, பீமரத சாந்தி ஆகியவை செய்ய தமிழ்நாட்டில் இத்தலம் மட்டுமே 100 சதவீதம் ஏற்ற தலமாக உள்ளது.

    34. இத்தலத்தில் நடக்கும் பெரிய விழாக்களில் கார்த்திகை மாதம் நடக்கும் சோமவார விழா மிகவும் சிறப்பானது. சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடப்பதை காண கண் கோடி வேண்டும் என்பார்கள்.

    35. திருக்கடையூர் தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பணிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது.

    36. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் அமைந்திருந்ததாக பாடல்கள் உள்ளன. ஆனால் இப்போது மாதவி வாழ்ந்த வீடு என்று எந்த ஒரு வீட்டையும் சுட்டிக்காட்ட இயலவில்லை.

    37. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் திராவிட கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.

    38. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47வது தலமாக போற்றப்படுகிறது.

    39. திருக்கடையூர் ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.

    40. கவிஞர் கண்ணதாசன் திருக்கடவூர் பதிகத்தில், அற்புத சக்தி அபிராமி என்றும், மமதை அறுத்து மனதினைக் காக்கும் மந்திர சக்தி அபிராமி என்றும் பாடுவார்.

    41. திருக்கடையூர் தலத்தில் ஈசனுக்கு முன்பே அம்பிகை வந்து அருள் செய்ததாக சொல்கிறார்கள்.

    42. இலங்கை அரசன் ஒருவன் திருக்கடையூருக்கு வந்து அபிராமி அன்னைக்கு திருப்பணி செய்துள்ளான்.

    43. தமிழ்நாட்டில் உள்ள சக்தி தலங்களில் அம்பிகை மீது பாடப்பட்ட துதிகளில் அபிராமி அந்தாதியே அதிகமாக பாடப்பட்டதாகும்.

    44. அபிராமி மீது பாடப்பெற்ற அந்தாதிகளை நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள் ஆய்வு செய்து உரை எழுதியுள்ளனர். சமீபத்திய காலங்களில் பாரதியார், கண்ணதாசன், கி.வா.ஜகன்நாதன் உள்பட பலர் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதியுள்ளனர்.

    45. அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களும் அன்னையின் சன்னதியில் சலவைக்கல்லில் பொறித்து பதிக்கப்பட்டுள்ளன.

    46. அன்னை அபிராமிக்கு ஆதிசங்கரர் கம்மல் செய்து அணிவித்தார். அந்த கம்மல் இன்றும் உள்ளது.

    47. அம்மனின் 108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

    48. அபிராமி அம்மனுக்காக ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள நவரத்ன அங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று அபிராமிக்கு இந்த அங்கி அணிவிக்கப்படும்.

    49. அபிராமியை புகழ்ந்து பாடி புகழ் பெற்ற அபிராமி பட்டரின் வாரிசுகள் இன்றும் உள்ளனர். அவர்கள் திருக்கடையூரில் நவராத்திரி திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.

    50. மிகச் சிறந்த பரிகாரத் தலமான திருக்கடையூர் தலத்தை 04364-287429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×