search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவையொட்டி பிரமாண்ட பரிவேட்டை ஊர்வலம்
    X

    குமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவையொட்டி பிரமாண்ட பரிவேட்டை ஊர்வலம்

    குமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி யானை - குதிரைகள் முன்செல்ல பிரமாண்ட பரிவேட்டை ஊர்வலம் நடத்த பக்தர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க செயலாளர் முருகன் தலைமையில் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவையட்டி ஆண்டுதோறும் பக்தர்கள் சங்கம் சார்பில் சிறப்பாக பரிவேட்டை ஊர்வலம் நடத்துவது போன்று இந்த ஆண்டு 23-வது வருடமாக விஜயதசமி மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சியை அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

    இதில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடை ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட ரத ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், கேரள புகழ் தையம்ஆட்டம், சிங்காரிமேளம், தேவராட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பஜனை போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

    அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளும் போது வழிநெடுகிலும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ணக் கோலமிட்டு திருவிளக்கு ஏற்றி தோரணங்கள் மற்றும் அலங்கார வளைவுகள் கட்டி அம்மனை சிறப்பாக வரவேற்று பூஜைகள் செய்யுமாறு பக்தர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது. 

    பரிவேட்டையின் போது அம்பாள் வேட்டைக்கு எழுந்தருளும் சமயம் வழக்கம்போல் இந்த ஆண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் உள்பிரகாரங்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப்பட்டது. 

    பரிவேட்டை ஊர்வ லத்தின்போது கன்னியா குமரி, அகஸ்தீஸ்வரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி அறநிலையத்துறை அதிகாரிகள் மின்விளக்கு வசதி செய்யும்படியும் சாலையின் இருபுறம் உள்ள முள்செடிகளை வெட்டி அகற்றும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன. கூட்டத்தில் சங்க ஆலோசகர் வக்கீல் அசோகன், பெரியசுவாமி, நாதன், ரெகு கிருஷ்ணன், பரமார்த்த லிங்கம், முருகன், குருசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் நாதன் நன்றி கூறினார். 
    Next Story
    ×